ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திடீர் மறியல் நடத்தினார். பணம் சப்ளை நடப்பதாக அவர் கூறினார்.
சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்ட சூழலில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை வேகப்படுத்தியிருக்கின்றன.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் கூட்டாக பிரசாரத்தை ஆரம்பித்தனர். அவர்களுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் சென்றார். இன்று (9-ம் தேதி) மதுசூதனனுக்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார்.
ஆர்.கே.நகர், நேதாஜி நகர் பகுதியில் பிரசாரம் செய்த செங்கோட்டையன், ‘ஜெயலலிதா அரசு செய்த திட்டங்கள் மூலமாக ஆர்.கே.நகரில் ஜெயிப்போம்’ என்றார். திமுக தரப்பில் வேட்பாளர் மருது கணேஷ் பிரசாரம் செய்து வருகிறார். திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வருகிற 11-ம் தேதி நடக்கிறது. அதில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள்.
பாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக இன்று (9-ம் தேதி) மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பிரசாரம் செய்தார். வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார் அவர். அப்போது சில இடங்களில் அதிமுக.வினர் தெருவோரங்களில் மேஜை, சேர்களைப் போட்டு அமர்ந்திருந்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல் முறையாக இப்படி வீதிகளில் அரசியல் கட்சியினர் முகாமிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதை மீறி கட்சியினர் அமர்ந்திருப்பதாகவும், இப்போதே பண வினியோகத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டு பகல் 12.30 மணியளவில் தமிழிசை அங்கேயே திடீர் மறியல் நடத்தினார்.
பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்களும் திரளாக இதில் கலந்து கொண்டனர். தேர்தல் அதிகாரி நேரில் வந்து விதிமீறல்களை தடுப்பதாக உறுதி தரும் வரை மறியல் செய்யப் போவதாக தமிழிசை கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.