பாரதிய ஜனதாக் கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் மூண்டது.
அதிமுக.வின் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு மத்திய அரசும், பாஜக மேலிடமும் துணை நிற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். நேற்று இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
தமிழிசை செளந்தரராஜன் ட்வீட்
இரட்டை இலைச்’சின்னம்’பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 24, 2017
இது தொடர்பாக திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசுதான் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறது’ என்றார். இதற்கு ட்விட்டரில் இன்று பதில் கொடுத்த தமிழிசை செளந்தரராஜன், ‘இரட்டை இலைச்’சின்னம்’பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்....’ என குறிப்பிட்டார்.
தமிழிசையின் இந்த ட்வீட், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ட்வீட்டரிலேயே இன்றே பதில் கொடுத்திருக்கிறார் திருநாவுக்கரசர். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள்.’ என கூறியிருக்கிறார்.
திருநாவுக்கரசர் ட்வீட்
'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள். https://t.co/uCTMlD6IOW
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) November 24, 2017
அதாவது, தமிழிசை கூறியதை ஒப்புக்கொண்டது போல நாகரீகமாக தனது பதிவை அமைத்துக்கொண்ட திருநாவுக்கரசர், ‘சிறு பிள்ளைகள் பொய் சொல்லாது. அதனால் நான் சொன்னது உண்மை’ என்பதாக தெரிவித்துள்ளார்.
இருவரின் பதிவுகளுக்கும் பதில்களாக இரு கட்சியினரும் மாறி மாறி சுவாரசியமாகவும் சூடாகவும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.