சினிமாவை கோட்டை விட்ட கமல்ஹாசன், வேறு எங்கே கோட்டை கட்டுவார்? தமிழிசை கேள்வி

‘சினிமாவை கோட்டை விட்டவர், வேறு எங்கே கோட்டை கட்ட?’ என நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

By: Updated: August 31, 2017, 03:56:16 PM

நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார். ‘சினிமாவை கோட்டை விட்டவர், வேறு எங்கே கோட்டை கட்ட?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.

‘பிக்பாஸ்’ நேரம் போக, எஞ்சிய வேளைகளில் தீவிரமான அரசியல் விமர்சனங்களில் நடிகர் கமல்ஹாசன் இறங்கியிருக்கிறார். தமிழகத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை, ஊழல் வெளிப்பாடு ஆகியவை காரணமாக ஆட்சியாளர்கள் மீது மக்களிடம் வெறுப்பு அதிகரித்து வருவது நிஜம். இதை திமுக சுட்டிக்காட்டினால், ‘உங்க ஆட்சியில் மட்டும் என்ன செஞ்சீங்க?’ என சிம்பிளான கேள்வியுடன் ஆட்சியாளர்கள் ‘எஸ்கேப்’ ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் அதே கேள்வியை எழுப்பும்போது, ‘இத்தனை நாள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?’ என்பதைத் தவிர, சுட்டிக்காட்ட வேறு எதுவும் இல்லை. கொஞ்சம் கூடுதலாக கேட்பது என்றால், ‘இப்போ கமல் திடீரென அரசியல் பேசும் நோக்கம் என்ன?’ என்று வேண்டுமானால் விவாதிக்கலாம்.

கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் தமிழிசை கேள்வி

ஆனால் அவர் எழுப்பும் கருத்துகளின் அடிநாதமான ஊழல், மிக வெளிப்படையானது. எனவே ஒரு பொழுதுபோக்காகவே கமல்ஹாசன் அரசியலை சீண்டினாலும்கூட, அதன் தாக்கம் வீரியமாக இருக்கிறது. தவிர, சினிமா ஸ்டாரான கமல்ஹாசனின் நான்கு வரி டிவிட்டர் செய்தியை அத்தனை மீடியாவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதாலும், அதன் தாக்கம் அதிகமாகிறது.

ட்விட்டரிலேயே அரசியல் செய்து வந்த கமல்ஹாசன், ஆகஸ்ட் 30-ம் தேதி கோவையில் ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரசாரமாக அரசியலில் புகுந்து விளையாடியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், ‘கோட்டையை நோக்கி பயணிக்கும் நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் தலைவராக இருக்கிறீர்களா என்று என்னை பார்த்து கேட்கிறீர்கள். நான் உங்களை பார்த்து கேட்கிறேன், தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதற்கான வேலையை இந்த சுபமுகூர்த்த வேளையில் தொடங்குங்கள்.

இது அரசியலில் உங்களை தூண்டிவிடும் வேலை அல்ல, உங்களின் கடமையை நினைவில் கொள்ளும் விழாவாகத்தான் நான் இந்த தருணத்தை எடுத்துக்கொள்கிறேன். என் வசதிக்காக சுயநலத்துடன் இந்த விழாவை திசை திருப்புகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.

இந்த நம்பிக்கையை என் மீது வைப்பதைவிட உங்கள்மீது நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள், தொடர்ந்து போராடுங்கள். சுத்தம் என்பது உங்கள் கைகளை நீங்களே கழுவிக் கொள்வதில் தான் இருக்கிறது.

நீங்கள் கொடுத்த உத்வேகத்துக்கு நன்றி. ஆனால் இதை எல்லாம் ஒரு நாள் சந்தோஷத்துக்காக மறந்து விடாதீர்கள். உங்கள் நினைவில் இதை கண்டிப்பாக வைத்துக்கொள்ளுங்கள், அதற்கான வேலையை தொடருங்கள். எப்படி தினமும் சாப்பிட வேண்டுமோ, குளிக்க வேண்டுமோ, அதுபோன்று தினமும் நமக்கு ஒரு கடமை இருக்கிறது. அதுதான் விழித்திருத்தல். அதை தினமும் செய்யுங்கள்.’ என கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

வழக்கமாக டிவிட்டரில் கேள்வி எழுப்பும் கமல்ஹாசனுக்கு, பொது மேடையில் பாஜக தலைவர்கள் பதில் சொல்வது வழக்கம். இந்த முறை திருமண விழா மேடையில் கமல்ஹாசன் எழுப்பிய கேள்விக்கு, ட்விட்டரில் பதில் கொடுத்திருக்கிறார் தமிழிசை. ஆகஸ்ட் 30-ம் தேதி பிற்பகலில் தமிழிசை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை டுவிட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன? சினிமாவைக் கோட்டை விட்டபின் வேறு என்ன கோட்டைதான் கட்ட?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழிசை.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் ரசிகர்களும், பாஜக.வினரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழிசையின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilisai soundrajan criticizes actor kamalhasan in twitter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X