விடுதலை சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
மெர்சல் படப் பிரச்னையில் பாஜக-வுக்கு எதிராக திருமாவளவன் கருத்து கூறினார். அதற்கு தமிழிசை பதில் கூறியதை தொடர்ந்து, இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று (அக்டோபர் 28) கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல விடுதலை சிறுத்தைகளுக்கு உரிமை உள்ளது. அதை விட்டு, விட்டு போனில் கொலைமிரட்டல் விடுவது, அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணையத்தில் என்னை மிக மோசமாக விமர்சித்துள்ளனர். பெண் தலைவராக உள்ள என்னை பற்றியும், எனது நிறத்தை பற்றியும் தலைமுடியை பற்றியும் விமர்சிக்கின்றனர். இதுதான் நாகரீக அரசியலா? இதுதான் பெண்களின் முன்னேற்றமா? பெண் தலைவர்களை இப்படித்தான் மோசமாக சித்தரிப்பார்களா?.
இந்த விமர்சனத்தை பெண்கள் சமூகத்தினரின் கவனத்துக்கும், தமிழக மக்களிடமும், தமிழக தலைவர்களின் கவனத்துக்கும் விட்டு விடுகிறேன். இதற்கு அவர்கள் பதில் கூறவேண்டும்.
எங்கள் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் எனது காரை வழிமறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் கலவரம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது சரியான நடைமுறை அல்ல. வன்முறை அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. விடுதலை சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. வலிமையான முறையில் கருத்துகள் இருக்கலாம். வன்மையான முறையில் இருக்க கூடாது. அமைதியான அரசியலுக்கு தமிழகம் திரும்ப வேண்டும். எனது காரை வழி மறித்ததால் கைது செயயப்பட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை விடுவிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.