சென்னை திரும்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்! அடுத்தது என்ன?

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் மும்பையில் இருந்து இன்று சென்னை திரும்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக-வில் தொடங்கிய குழப்பங்கள் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. முதலில் இரண்டாக பிளவுபட்ட அதிமுக, பின்னர் மூன்றாக உடைந்தது. இதனிடையே, ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி அணி இணைந்துவிட்டால், அதிமுக வலுப்பெறும் என கருதப்பட்டது. ஆனால், இந்த அணிகள் இணைப்பு அதிமுக-விற்கு பாதகமாகவே அமைந்துவிட்டது.

அதுவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளித்து வந்த டிடிவி திகனரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அணிகள் இணைப்புக்குப் பின்னர் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

இதனால், அரசு கொறடா ராஜேந்திரன், டிடிவி தினகரன் அணியில் உள்ள 19 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயருக்கு பரிந்துரை செய்யவே, சபாநாயகரும் டிடிவி தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே ஆளுநர் வித்யாசாகர் ராவ், தங்களது 19 எம்.எல்.ஏ.க்களின் கடிதத்துக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என்று தினகரன் தரப்பு அறிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆளுநரை சந்திக்க தி.மு.க. தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தி.மு.க.வின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார். ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அவரை சந்திக்க உள்ளதாகவும், சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும் துரைமுருகன் கூறினார்.

இந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார். இதனால், நாளை காலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், துரைமுருகன் தலைமையில் ஆளுநரை சந்திக்க உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மற்றும் கடலூருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றிருப்பதால், துரைமுருகன் தலைமையில் நாளை திமுகவின் உறுப்பினர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதம் மீது நடவடிக்கை எடுப்பாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

×Close
×Close