விவசாயிகளுக்காக இன்னல்களைப் பொறுத்துக் கொண்ட தமிழகம்!

போராட்டத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது ஆளும் கட்சியின் மறைமுக ஆதரவு இல்லாமல் இப்படி நடந்திருக்க முடியாது என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை

பல ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் எதிர்க் கட்சியின் தலைமையில் நடந்த கடையடைப்புப் போராட்டத்துக்கு அமோக ஆதரவு இருந்திருக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கோரியும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ஏப்ரல் 25 ( வாரநாளான செவ்வாய்க்கிழமை) அன்று மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்புவிடுத்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து திமுக – அதிமுக கட்சிகளுக்கான மாற்றாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் முன்னதாக திமுக அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. ஏனைய சிறு கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகப் பிரிவு, போராட்டத்தைப் பல்வேறு வகையில் விமர்சித்தது. “வேலையற்றவர்கள்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்று இழிவுபடுத்தினார் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தை ஆளும் அ.இ.அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, பேருந்துகள், இதர அரசு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

வெற்றிக்குப் பின்னால்…
ஆனால் நேற்று கடையடைப்புப் போராட்டத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது ஆளும் கட்சியின் மறைமுக ஆதரவு இல்லாமல் இப்படி நடந்திருக்க முடியாது என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழகம் முழுவதும் 60,000க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மருந்தகங்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கடைகளும் காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் ஓடின. இவற்றால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தமிழக அரசும், ஆளும் கட்சியின் இரண்டு பிரிவுகளும் பங்கேற்றிருக்கலாம். ஆனால் இது திமுக அழைப்புவிடுத்த போராட்டம் என்பதாலும் அதிமுகவின் இரண்டு தலைமைப் பீடங்களும் இப்போது மத்திய அரசை நேரடியாகப் பகைத்துக்கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதாலும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம் ஆளும் கட்சி இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தால் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக விளங்கும் திமுக இதில் பங்கேற்றிருக்குமா என்பதும் சந்தேகமே.

திமுகவின் புத்தெழுச்சி
ஆனால் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது அண்மைக் காலங்களில் குறிப்பாக கட்சியின் முதுபெரும் தலைவர் மு.கருணாநிதியின் கட்டாய ஓய்வுக்குப் பிறகு சற்று துவண்டு போயிருந்த திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் வெற்றிபெற்றிருப்பதால் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக மாற்றிக்கொள்ள அவர் முயலக்கூடும்.

அதே நேரத்தில் மக்கள், வியாபாரிகளின் மனப்பூர்வ ஆதரவு இருந்ததும் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. 41 நாட்களாக தில்லியில் தங்களை மிக மோசமாகத் தாழ்த்திக்கொள்ளும் வகையில் போராடி தங்களின் இழிநிலையை விளக்க முயன்ற விவசாயிகளை பிரதமர் கண்டுகொள்ளாமல் விட்டது தமிழக மக்கள் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதன் வெளிப்பாடே எதிர்கட்சிகள் நடத்தியது என்றாலும் நேற்றைய கடையடைப்புக்குப் பரவலான ஆதரவு இருந்தது.

ஒரு சில இடங்களில் திமுகவின் வற்புறுத்தலால் கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்களில் வன்முறையும் பிரயோகிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளில் கல்வீச்சு நடைபெற்றது. இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால் இந்தக் கடையடைப்பின் தேவையை சமூக வலைதளங்களில் சிலர் விமசிக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திக்கொண்ட பின் இந்தப் போராட்டம் தேவையா என்று வினவுகின்றனர். ஆனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை நிறுத்திக்கொண்டதற்கு இரண்டு காரணங்களை சொன்னார்கள். அவற்றில் ஒன்று ஸ்டாலினின் கோரிக்கை. விவசாயிகள் தில்லியில் போராட்டத்தை கைவிட்டுவிட்டு தமிழகக் கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதை நாம் மறந்திவிடலாகாது.

அதேபோல் சிலர், கடையடைப்பு நடத்துவதற்கு பதிலாக வணிகர்கள்அனைவரும் தங்களின் ஒரு நாள் வருமானத்தை விவசாயிகளுக்குக் கொடுத்து உதவலாமே என்று மாற்று யோசனையை முன்வைக்கின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு அனைவரும் தங்களால் இயன்றதைச் செய்யலாம்.

ஆனால், இந்தப் போராட்டம் நடத்தியதே, நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்குச் செய்ய வேண்டியதை மத்திய அரசு செய்ய வற்புறுத்துவதற்காகத் தான். இதனை பெரும்பான்மை மக்கள் புரிந்து கொண்டதால் தான் தங்களுக்கு ஏற்பட்ட ஒருநாள் இன்னல்களைப் பொறுத்துக்கொண்டனர்.

×Close
×Close