அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுந்த ஒற்றை தலைமை பிரச்சினை பெரும் விஸ்வரூபமாக வெடித்த நிலையில், ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில். ஜூலை 11-ந் தேதி மற்றொரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சியில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுக்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு தற்போது விசாரணையில் உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. இதில், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா என்ற நீதிபதியின் கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்று அவரது தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜூலை 11ந் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு இதுவரை எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறிய நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால் அனைத்து பதவியும் செல்லாது என்று ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த பொதுக்குழு வழக்கை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக கூறி வழக்கின் அடுத்த விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil