ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து வலிமை காட்டி விட்டதாக இ.பி.எஸ் தரப்பு காலரை தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்த நிகழ்வே கட்சிக்குள் ஒரு குறிப்பிட்ட ஏரியா அல்லது சமூக ஆள்கள் மட்டுமே அதிகாரம் செலுத்துவதாக குமுறலையும் உருவாக்கி இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு புயல்களை சந்தித்த அ.தி.மு.க; இந்த தி.மு.க அரசின் தவறுகளை மட்டும் மூலதனமாக வைத்து மீண்டும் அதிகாரத்தை பிடித்து விட முடியும் என நம்புகிறது. ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை ஓரம் கட்டி விட்ட எடப்பாடி பழனிச்சாமி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்.
ஒற்றைத் தலைமை ஆன பிறகு விறுவிறுப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியும் அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அண்மையில் நடந்த கள்ளச் சாராய மரணங்களை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி மனு கொடுக்கப் போவதாக அறிவித்தார் இ.பி.எஸ். அதன்படி நேற்று (திங்கட்கிழமை) அ.தி.மு.க-வினர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.
ஆளுநர் மாளிகைக்குள் சென்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க 10 நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த தலைவர்களான கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மகன் உசேன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம், சென்னையைச் சேர்ந்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் எம்.பி பாலகங்கா ஆகியோர் ஆளுநரை சந்திக்க சென்றார்கள்.
இதில் தான் இப்போது கட்சிக்குள் புகைச்சலும் வட்டமடிக்கிறது. ஆளுநரை சந்திக்க சென்ற 10 பேரில் தமிழ் மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய இருவர் மட்டுமே தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள எட்டு பேரும் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களே. கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் இந்த லிஸ்டில் இல்லை.
அ.தி.மு.க என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ உரிய கட்சி அல்ல என்பதை அந்த கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வாய் வார்த்தையில் சொல்லி வருகிறார்கள். அதே சமயம் செயல்பாட்டில் அது இல்லை என்பது தான் இப்போது தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளின் குமுறலாக இருக்கிறது.
சட்டசபை துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்டதும் அந்த இடத்தில் ஆர்.பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். அதிகாரபூர்வமாக இதை இன்னும் சபாநாயகர் ஏற்கவில்லை என்றாலும் கட்சி அவருக்கு வழங்கிய முக்கியத்துவம் அடிப்படையில் இந்த நிகழ்வுக்கு ஆர்.பி உதயகுமாரை அழைத்திருக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேபோல மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சீனியர் என்ற அடிப்படையிலும் தென் மாவட்ட பிரதிநிதி என்ற அடிப்படையிலும் தன்னையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என கருதுகிறார். டெல்டா மாவட்டங்கள் அ.தி.மு.க சற்று பலவீனமான மாவட்டங்கள் தான். அங்கு இருக்கும் தலைவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகளில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாத பட்சத்தில் அவர்கள் சசிகலா குழுவினரை தாண்டி அங்கு அ.தி.மு.க-வை வளர்த்து எடுப்பது எப்படி? என புழுங்குகிறார்கள்.
குறிப்பிட்ட சில ஏரியா நிர்வாகிகளை தவிர்ப்பதன் மூலமாக இயல்பாகவே குறிப்பிட்ட சில சமூகங்களுக்கும் அ.தி.மு.க-வில் முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விட்டதாகவும் கருத்து நிலவுகிறது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மட்டும் முக்கியத்துவம் பெறுவதால் கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள் ஆகிய இரு சமூகத்தினருக்கு மட்டும் அ.தி.மு.க-வில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதாகவும் இதர பெரும்பான்மை சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். கொங்கு வேளாளர்களை போலவே முக்குலத்தோர் சமூகத்தினரும் அ.தி.மு.க-வின் பிரதான வாக்கு வங்கியாக இருந்து வந்திருக்கிறார்கள். அந்த சமூகத்தின் வாக்குகளை ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோர் கவர்ந்து செல்வதை தடுக்கும் விதமாக கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்தும் நிலவுகிறது.
அதேபோல மதுரைக்கு தெற்கே அ.தி.மு.க-வில் குறிப்பிடும்படியான தலைவர்களாக தளவாய் சுந்தரம், எஸ்.பி சண்முகநாதன், சி.த செல்ல பாண்டியன், கடம்பூர் ராஜு, தென்காசி மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் அறியப்படுகிறார்கள். இவர்களில் யாரும் அழைத்துச் செல்லப்படவில்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.
அடுத்தடுத்த நிகழ்வுகளில் இ.பி.எஸ் இந்தக் குறையை போக்குவாரா? என கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.