தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், 133 தொகுதிகளில் வெற்றிப் பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் தனிப் பெரும்பான்மையுடன் இன்று ஆட்சி அமைக்கிறார். இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட, திமுக தலைவர் ஸ்டாலினிடம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
தமிழகத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்களான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, நடிகர் விஜய் சேதுபதி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு என பலர் ‘சுற்றுச்சூழல் நீதிக்கான கோரிக்கை; முதல்வரின் அவசர கவனத்திற்கு’ என்ற தலைப்பில் தங்களது கோரிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனர்.
அந்த அறிக்கைகளில், ‘தமிழக மக்களை வஞ்சிக்கக் கூடிய திட்டங்களான சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது, அதானி நிறுவனம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவுப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது, கூடன்குளம் அனுமின் நிலையத்தில் கூடுதல் உலைகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது, டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது போன்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என, தமிழகத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள், முதல்வராக பொறுப்பேெற்க உள்ள ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களின் கோரிக்கை தொகுப்பில், முக்கிய கல்வியாளர்கள், முன்னாள் அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டிற்கு வலுவான சுற்றுச்சூழல் சட்டங்கள் தேவைப்படும் நேரத்தில், மத்திய அரசு அவற்றை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சுற்றுச்சூழல் சட்டம் குறித்த அறிவிப்பு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு போன்ற சட்டங்களால் வழங்கப்படும் மிகக் குறைந்த பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தான அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். ‘தமிழ்நாடு சூழல் சார்ந்த பிரச்னைகள் அதிகம் இருக்கக் கூடிய மாநிலமாக இருந்து வருகிறது. சூழலியல் பிரச்னைகளுக்கு எதிராக அதிகனான மக்கள் இயக்கங்களை கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. வட மாநிலங்களான உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அங்கிருக்க கூடிய சூழலியல் சார்ந்த பிரச்னைகள் மாநிலங்கள் முழுவதும் எதிரொலிப்பதில்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏதோ ஒரு வகையில் சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்காக மக்கள் போராடி வந்துக் கொண்டுள்ளனர். நாட்டிலேயே அதிக வளர்ச்சியடையக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. இங்கு, தொழில்துறை வளர்ச்சிக்கும் சூழலியல் பாதுகாப்பில் மோதலும் இருந்துக் கொண்டே வருகிறது. வளர்ச்சியும், சூழலியல் பாதுகாப்பும் நமக்கு தேவை. இரண்டையும் பாதிக்காத வண்ணம் அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சூழலியலுக்கு ஏற்ற இசைவோடு, நீடித்த நிலைத்த வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, முதல்வாராக உள்ள திமுக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்த கடிதத்தின் மூலமாக, ஏற்கனவே உள்ள சூழலியல் சார்ந்த பிரச்னைகளில் சூழலியல் பாதுகாக்கும் விதமாக முடிவினை எட்டுவதற்கும், அடுத்தகட்ட வளர்ச்சி குறித்த நடவடிக்கைகளில் உற்பத்தி என்பது, சூழலியலுக்கு இசைவானதாக இருக்க வேண்டும் என்பதை வலியிறுத்தி கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், எட்டுவழிச்சாலை, மணல் திருட்டு, கூடன்குளம் பிரச்னை, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு என பல சூழலியல் சார்ந்த பிரச்னைகளில் மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் அரசு பின் வாங்க வேண்டும்’, என தெரிவித்தார்.ப்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.