கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் ரத்து, மெரினாவில் படகு சவாரி; சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

Tamilnadu assembly highlights no fee for shave in temple, boating in marina: மொட்டை அடிக்க கட்டணம் ரத்து, மெரினாவில் படகு சவாரி, சென்னையில் பொங்கல் திருநாளில் பிரமாண்ட கலை விழா உள்ளிட்ட சட்டப்பேரவையில் இன்றைய முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் ரத்து, மெரினாவில் படகு சவாரி, சென்னையில் பொங்கல் திருநாளில் பிரமாண்ட கலை விழா உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு… 

கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணமில்லை

தமிழகத்தில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள எந்த கோவில்களிலும் இனி, மொட்டை அடிக்க பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், கோவில்களில் திருமணம் நடத்த கட்டணமில்லை.

அர்ச்சகர் ஒதுவார் உள்ளிட்டோருக்கு பயிற்சி காலத்தில் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.3000 வழங்கப்படும்.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.1000  வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.

கோவில்கள் பாதுகாப்பிற்காக 10000 பாதுகாப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

சுற்றுலாத்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு… 

மெரினாவில் படகு சவாரி

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாக்ட் உடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும்.  இதில் காற்றின் திசையில் பயணிக்கும் படகு, மோட்டார் படகு, அதிவிரைவு படகு மற்றும் பொழுதுபோக்கு படகுகள் மூலம் சவாரி நடைபெறும்.

சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.

கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இயற்கை அழகை ரசிக்கவும், புதிய பயண அனுபவங்களைப் பெறவும், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக தலங்களில் கேபிள் கார் வசதியை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுக்கான ஆய்வுகள் செய்யப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருகை தரும், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் நீர்விழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் உட்பட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். 

ஏலகிரி, ஜவ்வாது மலை பகுதி சாகச சுற்றுலா உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டுகளிக்க லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்.

75வது சுதந்திர விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 75 சுற்றுலா தலங்க விளம்பரப்படுத்தப்படும்.

கிராமிய மற்றும் மலைத்தோட்ட சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும்.

தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

முதலியார் குப்பம் படகு குழாம் மற்றும் அருகிலுள்ள தீவுப் பகுதியில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளுடன் தங்கும் வசதி கொண்ட படகு இல்லம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கலை மற்றும் பண்பாட்டுத்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று கலை மற்றும் பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு… 

பொங்கல் திருநாள் கலைவிழா

தமிழக பாரம்பரிய கலைகள் இடம்பெறும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் பிரம்மாண்ட கலைவிழா நடத்தப்படும். இதற்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இளைஞர்களின் கலை திறனை வெளிக்கொணர ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மற்றும் மாநில வாரியாக கலை போட்டிகள் நடத்துவதற்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கலைமாமணி விருதுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் தொகையானது ரூ. 50000 லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

இயல், இசை, நாடக மன்றத்தில் வழங்கப்படும் தொகை ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

சென்னையில் உள்ள தொல்பொருள் தொகுப்பு காட்சிகளை விரிவுபடுத்தும் விதமாக ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் 22.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

தொல்லியல் நிறுவனம், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் புதிதாக விருதுநகர், திருநெல்வேலி, தருமபுரி உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு மற்றும் 2 இடங்களில் கள ஆய்வு நடத்தப்படும்.

பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து

நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று, நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly highlights no fee for shave in temple boating in marina

Next Story
எலக்ட்ரிக் பஸ் திட்டம்; அமைதியாக கைவிடும் தமிழக அரசு!Tamil Nadu news in tamil: TN to not procure 525 new electric buses Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express