ஆக. 28-ல் தமிழக சட்டமன்ற உரிமைக்குழு : ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்?

ஆகஸ்ட் 28-ல் தமிழக சட்டமன்ற உரிமைக்குழு கூடுகிறது. இதில் ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஆகஸ்ட் 28-ல் தமிழக சட்டமன்ற உரிமைக்குழு கூடுகிறது. இதில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டமன்றத்திற்கு எடுத்து வந்த குற்றத்திற்காக ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தெரிகிறது.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி தினமான கடந்த ஜூலை 19-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுடன் சட்டமன்றத்திற்கு வந்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் சென்னையில் தங்கு தடையின்றி விற்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர்.

இதற்கு சபையில் கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவது தெரிந்தால், போலீஸுக்கு தகவல் கூறி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம். அதை விடுத்து அரசியலுக்காக இதை தி.மு.க. செய்கிறது’ என்றார். அமைச்சர் ஜெயகுமார், ‘இது இந்த அவையை களங்கப்படுத்தும் செயல்.’ என கண்டித்தார். ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையை சட்டமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு அனுப்புவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

அதன்படி சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு விசாரிக்கிறது. இதற்காக வருகிற 28-ம் தேதி உரிமைக்குழு கூடுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகஸ்ட் 25-ம் தேதி (இன்று) அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது என்ன விதமான நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து முடிவெடுக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 18-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தபோது, திமுக எம்.எல்.ஏ.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபாலை சூழ்ந்துகொண்டு, சிலர் அவரை பிடித்து தள்ளினர். அந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் அம்பேத்குமார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், சுரேஷ்ராஜன், கார்த்திகேயன், முருகன், கு.க.செல்வம் ஆகிய 7 பேரையும் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய சட்டமன்ற உரிமைக்குழு பரிந்துரை செய்தது.

கடந்த ஜூன் 23-ம் தேதி சட்டமன்றத்தில் இந்த விவகாரம் விவாதத்திற்கு வந்தது. அப்போது சபாநாயகர் தனபால், ‘மேற்படி திமுக எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் இதற்கு மேல் சபைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட மாட்டோம் என மன்னிப்பு கோரியிருக்கிறார்கள். எனவே அவர்களை மன்னித்து, தண்டனை விதிக்காமல் விடுகிறோம்’ என அறிவித்தார். அதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆனால் அப்போது எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதத்திற்கு விரோதமாக மீண்டும் குட்கா விவகாரத்தில் திமுக நடந்து கொண்டதாக உரிமைக்குழு கருத வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த முறை ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ஆனால், அவர்கள் வாக்களிக்க முடியாது. எனவே அது திமுக.வின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும். திமுக – டிடிவி.தினகரன் அணி இணைந்து மேற்கொள்ளும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு எடப்பாடி அரசு வைக்கும் ‘செக்’காக இது இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close