டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். செப். 5-ம் தேதிக்குள் பதிலளிக்க அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக.வில் இருந்து சசிகலாவை வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே செப்டம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழுவை இவர்கள் கூட்டுகிறார்கள்.
அதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு நெருக்கடியை உருவாக்கி பதிலடி கொடுக்க, டிடிவி.தினகரன் தயாரானார். டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 21-ம் தேதி தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக’ கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கவர்னருக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தனர். ஆனால் கவர்னர் அதற்கு உடன்படவில்லை.
இதற்கிடையே அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கொடுத்த கடிதம் அடிப்படையில், ‘முதல்வருக்கு எதிராக செயல்படும் உங்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ எனக் கேட்டு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு கடந்த 30-ம் தேதி சட்டமன்றச் செயலாளரை சந்தித்து டிடிவி அணி எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சிலர் விளக்கம் அளித்தனர்.
ஆனால், ‘அந்த விளக்கம் முழுமையாக இல்லை. அதை தற்காலிக விளக்கமாக மட்டுமே ஏற்க முடியும். முழுமையான விளக்கத்தை செப்டம்பர் 5-ம் தேதிக்குள் 19 எம்.எல்.ஏ.க்களும் வழங்க வேண்டும்’ என சபாநாயகர் தனபால் கூறியிருக்கிறார். இந்த விவரங்களை குறிப்பிட்டு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் அவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட கவர்னர் மறுத்துவிட்ட நிலையில், அரசுக்கு நெருக்கடி குறைந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களில் சிலரும் எடப்பாடி தரப்புடன் சுமூக உறவை விரும்புவதாக தெரிகிறது. எனவே அவர்களிடம் இருந்து ‘வருத்தம்’ தெரிவித்து கடிதம் வந்தால், மன்னித்து விட்டுவிட அரசுத் தரப்பு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.