இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன்பின்பு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் தொடங்கிய சட்டப் பேரவைக் கூட்டத் தொடர், ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 24 நாட்கள் நடக்கிறது.
இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மானியக் கோரிக்கை நடைபெறும். ஜூன் 16 ஆம் தேதி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகளும், 19ஆம் தேதி, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறைகுறித்த மானியக் கோரிக்கைகளும், 20, 21ஆம் தேதிகளில், உள்ளாட்சி, நகராட்சி குறித்த மானியக் கோரிக்கைகளும் நடைபெறும். ஜூலை 10ஆம் தேதி, முதல்வரின் பதிலுரை நடைபெறும்.
குறிப்பாக, ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டி கொண்ட கூட்டத்தொடராக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் என அதிமுக உடைந்து இருக்கும் நிலையில் இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டதாக தனியார் டி.வி.யில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் கேள்வி - பதில் நேரத்துக்கு பிறகு தி.மு.க. தரப்பில் இந்த விவகாரம் சம்பந்தமாக கேள்வி எழுப்ப, நேற்று நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக,டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும்' என்றார். எனவே, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச ஆரம்பித்த போது, திமுக உறுப்பினர்கள் ''தெர்மாகோல்' 'தெர்மாகோல்' என கூச்சலிட்டனர். இதனால் அவை முழுவதுமே சிரிப்பலையில் மூழ்கியது.