தமிழக சட்டசபை கூடுவது எப்போது? விரைவில் அறிவிப்பு!

இனி மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் குறித்து, கவர்னர் புதிதாக உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே சட்டசபையில் நடத்த முடியும்.

இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

அன்றைய தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடைபெற்றது.

அதன் பிறகு, மார்ச் 16-ந் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபையில், 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. அன்றே சட்டசபையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுவாக, சட்ட சபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம். ஆனால், மானிய கோரிக்கை மீதான விவாதத்தை, சூழ்நிலை கருதி சில மாதங்கள் கழித்து சட்டசபையை கூட்டி நடத்த, அவை விதிகளில் இடம் உள்ளது.

அந்த வகையில், ஏப்ரல் 10-ந் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரால் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சட்டசபையை உடனே கூட்டி, குடிநீர் பிரச்சனை, வறட்சி, ‘நீட்’ தேர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 11-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் உத்தரவிட்டார்.

இதற்கு, தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால், இனி மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் குறித்து, கவர்னர் புதிதாக உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே சட்டசபையில் நடத்த முடியும்.

இந்நிலையில், ‘தமிழக சட்டசபை விரைவில் கூட்டப்படும்’ என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதன்படி, அடுத்த மாதம் 7ம் தேதி அல்லது மாதத்தின் இரண்டாம் வாரத்தில், சட்டசபையை கூட்ட அரசு முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நாளை(மே 23) முதல், துறை வாரியாக அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வர் பழனிசாமி தினமும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

×Close
×Close