பார் கவுன்சில் தேர்தலில் அத்தனை அரசியல் கட்சிகளும் ஒதுங்கிக் கொள்ள, விடுதலை சிறுத்தைகள் மட்டுமே கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறது.
தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல், மார்ச் 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் புதிதாக வரும் வழக்கறிஞர்களை பதிவு செய்வது, வழக்கறிஞர்களின் பணிகளை நெறி செய்வது என முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான வாக்குப் பதிவுதான் மார்ச் 28-ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள சுமார் 58,000 வழக்கறிஞர்கள் இதில் வாக்களிக்கிறார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், இதே சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ், பார் கவுன்சிலின் இப்போதைய தலைவர் செல்வம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சசி, கினி இம்மானுவேல் உள்பட தமிழ்நாடு, புதுவையில் சுமார் 200 வழக்கறிஞர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வாக்குகள் பெற்ற 25 பேர், பார் கவுன்சில் உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
பார் கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதும், அந்த 25 பேரும் வாக்களித்து தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவரை தேர்வு செய்வார்கள். இந்தத் தேர்தல் தொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ‘திருமங்கலம், ஆர்.கே.நகர் தேர்தல்களை விஞ்சுகிற விதமாக பார் கவுன்சில் தேர்தல் நடைபெறுவது போல் தெரிவதாக’ நீதிபதிகள் கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தலில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தலையிடவில்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து வேட்பாளர்களை களம் இறக்குகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் வில்லவன் கோதை ஆகியோரை பார் கவுன்சில் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார் திருமா. இவர்களில் பார்வேந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி செய்கிறார். வில்லவன் கோதை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக இருக்கிறார்.
இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி, பிப்ரவரி 8-ம் தேதி நடந்தது. விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு ஆதரவு திரட்டிப் பேசினர். அடுத்தகட்டமாக திருமாவளவனே இவர்களுக்கு பிரசாரம் செய்ய இருக்கிறார்.
குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் வழக்கறிஞர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவர்கள் மத்தியில் இருவருக்கும் வாக்கு கேட்டு பேச இருக்கிறார் திருமா. மற்ற துறைகள் போல் அல்லாமல், வழக்கறிஞர்களாக கடந்த 10 ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே திருமாவளவனின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என நம்புவதாக சிறுத்தை நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்தத் தேர்தலால் தங்களுக்கு என்ன லாபம் இருக்கப் போகிறது? என நினைத்து ஒதுங்கியிருக்கலாம். ஆனால் திருமாவைப் பொறுத்தவரை தனது கட்சி நிர்வாகிகளுக்கு எங்கெங்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முடியுமோ, அத்தனை இடங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த அடிப்படையில்தான் தமிழகத்தின் பிரதான கட்சிகளே கால் பதிக்காத ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு தொழிற்சங்கங்களிலும் விடுதலை சிறுத்தைகள் முக்கிய இடங்களை பிடித்து வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை பார் கவுன்சிலும், வழக்கறிஞர்கள் சங்கங்களும் மிக முக்கியமான அதிகார மையங்களாக இருக்கின்றன. ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் திருமா இதை நன்கு அறிவார். எனவே அங்கும் எங்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயம், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் என்றதுமே குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவரைத்தான் வேட்பாளர்களாக திருமா நிறுத்தியிருப்பார் என்கிற பார்வை இருக்கும். அதையும் உடைக்கிற விதமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பார்வேந்தனுக்கும், பிற்பட்ட நாடார் சமூகத்தை சேர்ந்த வில்லவன் கோதைக்கும் கலந்தே வாய்ப்பு கொடுத்திருக்கிறார் திருமா. அவரது இந்த சமூக நீதிப் பார்வைக்கும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றார் அந்த நிர்வாகி.
திருமாவின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.