scorecardresearch

பேரறிவாளனை கட்டித் தழுவிய ஸ்டாலின்; காங்கிரசுக்கு வெட்கம் இல்லையா? குஷ்பு கேள்வி

திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா? முதல்வரின் செயலை கண்டிக்காத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பில்லாத செயலைத்தான் காட்டுகிறது

பேரறிவாளனை கட்டித் தழுவிய ஸ்டாலின்; காங்கிரசுக்கு வெட்கம் இல்லையா? குஷ்பு கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுவித்து வந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள காங்கிரஸ் தயாரா என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன் சாந்தன் பேரறிவாளன் நளினி உட்பட 7 பேர் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியில் வந்த பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஜாமீன் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சியினர் பெரும் வரவேற்கு அளித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதேபோல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் இவர்களை விடுதலை செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு கொடுத்து வந்தாலும், பாஜக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனை கட்டிப்பிடித்து தழுவி வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்தார். தற்போது இந்த புகைப்படத்துடன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்.

விடுதலையான பேரறிவாளனை தமிழக முதல்வர் கட்டித்தழுவி வரவேற்கிறார். ஆனால் இதில் பாஜக அரசியல் விளையாட்டு விளையாடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. நான் சவால் விடுகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துளியாவது அவமானம் இருந்தால் இந்த விவகாரத்தை காரணம் காட்டி திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?  முதல்வரின் செயலை கண்டிக்காத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பில்லாத செயலைத்தான் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu bjp kushboo say about perarivalan release