பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
பாஜக மேலிட ஆசியுடன் தமிழக ஆளுங்கட்சி செயல்பட்டு வருவதாகவும், டெல்லி மேற்பார்வையில் தான் அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தன. அதிமுக அணிகள் இணைப்பு நடந்த சிறிது நேரத்தில் புதிய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு நிதி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.
ஜெயலலிதா அமைச்சரவையில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த மாபாய் பாண்டியராஜனுக்கு, கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம் இருந்த கனிம வளத்துறை, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுக்கப்பட்டது. உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித்துறை ஓ.பி.எஸ்.ஸுக்கு போனதால், உடுமலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை ஒதுக்கப்பட்டது. கால் நடைத்துறையை வைத்திருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, செங்கோட்டையனிடம் கூடுதலாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூன்று தினங்களுக்கு முன்பு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை நேரில் சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும், எடப்பாடி பழனிசாமி அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும் மனு அளித்து பரபரப்பைக் கூட்டினர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் 'நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் தீர்வு' என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் பல கட்ட தொடர் ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டுவருகிறார். இதையொட்டி இன்று எடப்பாடி பழனிசாமியை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பேட்டியளித்த ஹெச்.ராஜா, "புதிதாக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ்., மாஃபா.பாண்டியராஜனை சந்தித்து வாழ்த்து கூறியதாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.