ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்பது தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான ஓகி புயல் நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரியை தாக்கியது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஓகி புயலின் தாக்குதலுக்கு முன்பே ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்ற கன்னியாகுமரி மற்றும் கேரள மீனவர்கள் பலர் புயலில் சிக்கினார்கள். அவர்களில் பலர் இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களின் உறவினர்கள் இதனால் கவலையில் இருக்கிறார்கள்.
ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள், அந்தப் புயலின் திசையிலேயே குஜராத்தை நோக்கி தள்ளிச் செல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் யூகிக்கிறார்கள். தவிர, சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளில் அவர்கள் தத்தளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அவர்களை மீட்க முப்படைகளின் உதவியையும் தமிழக, கேரள அரசுகள் கோரியுள்ளன.
இன்று (டிசம்பர் 6) காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முப்படை அதிகாரிகளுடன் இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஏற்கனவே கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை ஆகியவை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கருத்து பரிமாற்றம் செய்தனர்.
தொடர்ந்து மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்படும் என தெரிகிறது.
தலைமைச் செயலாளரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.