Tamil Nadu CM Stalin Meet President Ramnath Kovind : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தோதலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். இந்த பணிகளுக்காக பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் 18-ந் தேதி (ஜூன்) முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து தமிழகம் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்தித்த ஒரு மாத இடைவெளியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்தார். இதற்காக நேற்று மாலை டெல்லி சென்ற அவருக்கு தமிழக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடந்து ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் தமிழகம் தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்பி டி.ஆர் பாலு, உடனிருந்தார்.
இந்த சந்திப்பினை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கூறுகையில், தமிழக சட்டசபை அமைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சட்டசபை நூற்றாண்டு விழாவிற்கு தலைமை ஏற்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன். இந்த விழாவின் போது, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருப படம் திறக்கப்படவும், மதுரையில் கருணாநிதி பெயரில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிண்டி அரசு மருத்துவமனை, மற்றும் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அமைக்கப்பட உள்ள நினைவுத்துண் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருமாறு அழைப்பு விடுத்தேன்.
இந்த கோரிக்கைகளை ஏற்ற ஜனாதிபதியும் வருவதாக உறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பில், நீட் தேர்வு, மேகதாது, குறித்து எதுவும் பேசவில்லை என்றும், கொரோனா தொற்றின் 3-வது அலை வந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணம் என்றும் கூறிய ஸ்டாலின், ஒரு வேளை மூன்றாவது அலை வந்தால் அதனை எதிர்கொள்ள தமழக அரசு தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil