Advertisment

குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு : மு.க.ஸ்டாலின்

ரூ.75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin

MK Stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று 3 நாள் வேளாண் சங்கமம்-2023 விழாவை கேர் கல்லூரியில் தொடங்கி வைத்து கண்காட்சியினை பார்வையிட்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் ரூ.75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisment

திருச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” மற்றும் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்ததாவது; "மிக மிக பசுமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் இப்போது மனமும் பசுமையாகி விடுகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியை பார்வையிட்டுச் செல்லுகிற நேரத்தில், இன்றைக்கு நான் பெற்ற உணர்வை அன்றைக்கு நான் பெற்றேன்.

பழங்கள் - காய்கனிகள் – ஆகியவற்றை மொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய, அந்த பெரும் வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முதலில் என்னுடைய நன்றியை காணிக்கையாக விரும்புகிறேன்.

நம்முடைய எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை பொறுத்தவரைக்கும், அவரை ‘வேங்கையின் மைந்தன்’ என்று நாங்கள் அரசியல் மேடைகளில் சொல்வதுண்டு. ஆனால் வேளாண் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றதற்கு பிறகு அவர் ஆற்றி வரக்கூடிய பணிகளைப் பார்க்கும் போது, அவர் உழவர் மகனாகவே இப்போது மாறியிருக்கிறார்.

publive-image

வேளாண் துறையையே தலைசிறந்த துறைகளில் ஒன்றாக அவர் மாற்றியிருக்கிறார். கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று நாங்கள் உழைத்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அதில் மிகச் சிறப்பான வளர்ச்சியை வேளாண் துறையும் பெற்றுள்ளது. மற்ற துறைகளைப் போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்துவிட முடியாது. மற்ற துறைகளை வளர்க்க நிதி வளம் இருந்தால் போதும். ஆனால், வேளாண் துறையை வளர்க்க, நிதித்துறை மட்டுமல்ல, நீர்வளமும் வேண்டும். தேவையான இடுபொருட்கள் காலத்தில் கிடைக்க வேண்டும்.

கழக ஆட்சி அமைந்ததும் நீர் வளமும் கைகொடுத்தது. பருவ மழையும் முறையாகப் பெய்து உழவர்களுக்கு உதவியாக இருந்தது. வேளாண் பெருங்குடி மக்களுக்குத் தேவையான இடுபொருட்களை வேளாண் துறை குறித்த காலத்தில் தேவையான அளவு வழங்கியது. அதனால் உற்பத்தி பெருகியது. உற்பத்தி பரப்பும் அதிகமானது! மண்ணும் ஈரமானது. உழவர்களது உள்ளமும் ஈரமானது. மண்ணும் மக்களும் மகிழ்ந்தார்கள். அதனால்தான் இதுபோன்ற வேளாண் சங்கமத்தை நம்மால் இன்றைக்கு பெருமையோடு நடத்த முடிகிறது.

கழக அரசு அமைந்ததும் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில், நம்முடைய எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் குறிப்பிட்டு காட்டியதுபோல, வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி இருக்கிறோம். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், வேளாண் நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம், நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம்,வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை,மண்வள மேலாண்மை, இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குதல் ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில்தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

நமது அரசு பொறுப்பேற்று, செயல்படுத்திய திட்டங்களினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-2022-ஆம் ஆண்டு 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு ஒரு சாதனையை நாம் படைத்திருக்கிறோம். குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காக கடந்த 2022-ம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் எட்டியிருக்கிறோம். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நமது அரசு, நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசனப் பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.

அந்த சாதனை பயணத்தின் தொடர்ச்சியாகதான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

2023-24-ஆம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக நாம் கொண்டாட இருக்கிறோம். சிறுதானிய இயக்கத்தை நாம் நடத்தி வருகிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 விழுக்காடு கூடுதல் மானியத்தை அரசு வழங்கி வருகிறது. இதற்கென 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

publive-image

‘தமிழ் மண் வளம்’ என்ற இணையதளத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். விவசாயிகளுக்கு மிகுந்த பயனளித்துவரும் ‘உழவன் செயலி’ பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவிலேயே, முதல் மாநிலமாக நமது அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்திட உழவர்களின் அனைத்து விவரங்களை உள்ளடக்கிய ஒற்றை சாளர வலைத்தளமான ‘கிரெய்ன்ஸ்’ (GRAINS) உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதலாக சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும், இதர இரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில், நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையாக மட்டுமே 376 கோடியே 63 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான டன் ஒன்றுக்கு 2821 ரூபாய்க்கு மேல் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது.

உழவர்களிடையே காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம். பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்த ஏதுவாக நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது. வேளாண் இயந்திர மயமாக்குதலையும், விளைபொருட்களின் மதிப்புக் கூட்டுதலையும் ஊக்கப்படுத்துகிறது. வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைத்தல், இ-வாடகை கைபேசி செயலி வாயிலாக இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் ஆகியவற்றையும் நமது அரசு செயல்படுத்தி வருகின்றது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகள் மற்றும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும் உழவர்களுக்கு வழங்கி வருகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடர்ந்து நமது அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 157 மின்னணு தேசிய வேளாண் சந்தைகளில் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் உழவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகளும், ஒரு தோட்டக்கலை கல்லூரியும் 40 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அங்கக வேளாண்மைத் துறையானது, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கழக அரசு அமைந்தபிறகு முதலில் ஒரு லட்சம் மின் இணைப்புகளை இலவசமாக கொடுத்தோம். பின்னர் கூடுதலாக 50 ஆயிரம் மின் இணைப்புகளைக் கொடுத்தோம். இப்போது மேலும் 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்குகிறோம்.உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1990-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவர் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி தான். இந்த முப்பதாண்டு காலத்திலும் – எல்லாக் காலத்திலும் உணவுப் பொருள் விளைவித்து - தமிழக வேளாண் பெருங்குடிமக்கள் வளம் பெற தலைவர் கருணாநிதிதான் அன்றும் இன்றும் என்றும் காரண கர்த்தாவாக அமைந்திருக்கிறார்.

கடந்த பத்தாண்டு காலம் தமிழகத்தை ஒரு கட்சி ஆண்டது. பத்து ஆண்டுகாலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இரண்டு ஆண்டுகாலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம்.

 சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” - இது தலைவர் கருணாநிதியின் முழக்கம்! சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம் - இது எனது முழக்கம். அந்த வரிசையில்தான் சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான வேளாண் வணிகத் திருவிழாவை சென்னையில் தொடங்கி வைத்தேன். இப்போது வேளாண் சங்கமத்தை இங்கே இந்த திருச்சியில் தொடங்கி வைத்திருக்கிறேன்.

இயந்திரங்கள் – தொழிற்சாலைகள் – துணி நூல்கள்ஆகியவற்றுக்காகக் கண்காட்சிகள் நடத்துவதைப் போல வேளாண்மைக்கு கண்காட்சி நடத்துவதும் மிக மிக அவசியமானது. வேளாண்மைத் துறையானது அதிகமான அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகவும் இதுபோன்ற கண்காட்சிகள் மூலமாக நாம் சொல்லலாம்.

நவீன தொழில்நுட்பங்கள் - புதிய ரகங்கள் – வேளாண்மை இயந்திரங்கள் - மதிப்புக் கூட்டும் தொழில் நுட்பங்கள் – ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றிய அடிப்படை தகவல்களை உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்தாக வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன.

publive-image

உழவர்களது உற்பத்தி அதிகமாக வேண்டுமானால் – அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்! உயர்ந்த விளைச்சல் தரவல்ல புதிய ரகங்கள், பாரம்பர்ய நெல் இரகங்கள், வருமானத்தை பெருக்க நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி மூலமாக இயங்கும் கருவிகள், செயல்விளக்கங்கள், தொழில் நுட்பங்கள் – போன்றவைகளை உழவர்களுக்கு ஊட்டுவதற்கு இதுபோன்ற சங்கமங்கள் மிக மிகத் தேவை!

தமிழக வேளாண்துறை மட்டுமல்லாமல் - மற்ற துறைகளும் இதில் பங்கெடுத்துள்ளது. ஒன்றியத் துறைகளும் வருகை தந்துள்ளன. வாரியங்கள் –பல்கலைக்கழகங்கள் – தனியார் நிறுவனங்களும் வருகை தந்துள்ளன. இதுவே மிகப்பெரிய சங்கமமாக இது அமைந்துள்ளது. இத்தகைய கூட்டுறவு முயற்சிகள் அனைத்து துறைகளிலும் தேவைப்படுகிறது.

வேளாண்மை என்பது வாழ்க்கையாக - பண்பாடாக இருந்தாலும் அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை. அப்படி அது உயர்த்தப்பட வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலமெல்லாம் இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன்தான் உழவர் சந்தைகளை தலைவர் கருணாநிதி, முதல்வராக இருந்தபோது அமைத்துக் கொடுத்தார்கள்.

இதன் அடுத்தகட்டமாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை நமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கி இருக்கிறோம். இத்தகைய நிறுவனங்களுக்கு மூலதன உதவியும் - கடன் உத்தரவாதமும் தரப்பட்டுள்ளது. இவர்களது உற்பத்தி பொருட்கள் மாநகராட்சி அங்காடிகளில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் உழவர்களுக்காகச் செய்யப்பட்ட மாபெரும் முன்னெடுப்பு இது!

வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் - விரும்பியவர் அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக இது மாற வேண்டும். இன்றைக்கு நிலத்தை விட அதிக மதிப்பு கொண்டது ஏதுமில்லை. அத்தகைய நிலத்தை வைத்திருக்கும் உழவர்களை மகிழ்ச்சிக்குரியவர்களாக மாற்ற வேண்டும்.

உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இதுபோன்ற கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்துங்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். வேளாண் அறிவு என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவரும் பெற்றாக வேண்டும்.

நேற்று நான் திருச்சிக்கு வந்தபோது, செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை பார்த்து இந்தத் துறையினுடைய அதிகாரிகளையும், அமைச்சரையும் அழைத்து அது பற்றி கேட்டேன். அதாவது, இந்த ஆண்டு சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்து தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை அரசிடம் வைத்திருப்பதாக ஒரு செய்தியை பார்த்தேன்.

நான் அவர்களோடு கலந்து பேசி அதை உடனடியாக அரசு ஏற்றுக்கொண்டு, ரூபாய் 75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவின் மூலமாக நம்முடைய உழவர்களுக்கும் தெரிவித்துக் கொண்டு இதில் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்காக மீண்டும் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment