Advertisment

மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பதிவு முறையாக நடக்கிறதா? தஞ்சையில் ஸ்டாலின் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin 1

முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருச்சி வந்தார். நேற்று காலை 11.30- மணிக்கு திருச்சி வந்த முதல்வர் கார்கில் போரில் வீரமரணமடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபிக்கு சென்று வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் திமுக வாக்குச்சாவடி முகவர்களிடம் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து விரிவாக பேசினார்.

Advertisment

இன்று காலை திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லுரியில் 3 நாள் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கி வைத்து கண்காட்சியினை பார்வையிட்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். பின்னர் மதிய உணவுக்குப் பிறகு தஞ்சை சென்ற முதல்வர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமுக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 27) தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழகத்தின் தலைமகன், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15-ம் நாள் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அவ்வறிப்பினை செயல்படுத்தும் வகையில், மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது, பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் அங்கீகாரம் கொடுப்பது மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது.

திருச்சியில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டுவிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்லும் வழியில், பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பதிவு செய்த வந்த மகளிரிடம் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் சிரமங்கள் ஏதாவது இருக்கிறதா?, பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்களா? என்று கேட்டு, கலந்துரையாடினார்.

தொடர்ந்து, முகாமில் பணிபுரியும் பணியாளர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் தினசரி எவ்வளவு பதிவு செய்யப்படுகிறது, பதிவு செய்யும் போது தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏதாவது ஏற்படுகிறதா?, விண்ணப்பங்களை பதிவு செய்ய வரும் மகளிர் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து உதவிட வேண்டும் என்றும், விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும் என்றும் முகாமிலுள்ள அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் முதல்வர் அறிவுரை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரையிலும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெறும். முதல் கட்டமாக 850 நியாய விலைக்கடைகளிலுள்ள 3,72,506 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 333 நியாய விலைக்கடைகளிலுள்ள 3,39,264 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

க.சண்முகவடிவேல்

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment