மாற்றுக் கட்சியை சேர்ந்த பத்தாயிரம் பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் திமுக சார்பில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பத்தாயிரம் பேர் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முத்துசாமி உட்பட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து முதலமைச்சருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால் இந்நிகழ்வு தற்போது நடைபெறுகிறது. உங்களை எல்லாம் வரவேற்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். திமுகவில் இணைந்துள்ள கோவை செல்வராஜ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்த போது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதை நான் பார்த்தவன். இதர அதிமுகவினர் யாரேனும் விவாத மேடைகளில் பங்கேற்பதை பார்க்கும் பொழுது எனக்கு கோபங்களும் ஆத்திரங்களும் வரும் ஆனால் கோவை செல்வராஜ் பங்கேற்கும் போது எனக்கு ஆத்திரமோ கோபமோ வருவது கிடையாது.
வைரத்தை தீட்ட தீட்ட தான் ஜொலிக்கும் என்பது போல் நம்மை திட்டத்திட்ட தான் நாம் வைரம் போல் ஜொலித்துக் கொண்டிருக்கிறோம். திமுகவை பொருத்தவரை நாம் தாய்க்கழகம் என சொல்வதற்கு காரணம் இந்த கழகத்திற்கு ஒரு வரலாறு உள்ளது. இந்த கட்சியை துவக்குகின்ற நேரத்தில் பேரறிஞர் அண்ணா, ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் ஆட்சிப் பொறுப்பிற்காக இந்த இயக்கம் துவக்கப்படுகிறது என்று இந்த கட்சியை துவங்கவில்லை. இந்த கழகத்தை துவங்குகின்ற நேரத்தில் இந்த கழகம் ஆட்சிக்காக மட்டும் அல்ல நாட்டில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு விவசாய மக்களுக்கு நெசவாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் இந்த கழகம் துவங்கப்படுகிறது என இந்த இயக்கத்தை உருவாக்கி தந்தார்.

நாட்டில் தற்போது எவ்வளவோ கட்சிகள் உள்ளது வரலாற்றில் இடம்பெற்ற கட்சிகளும் உள்ளது தற்பொழுது அதன் செயல்பாடுகளை பார்த்து வருகிறோம், அதே நேரத்தில் திடீர் திடீரென தோன்றக்கூடிய கட்சிகளையும் பார்க்கிறோம். அப்படி தோன்றக்கூடிய கட்சிகள் எல்லாம் தோன்றிய அடுத்த நாளோ அல்லது தோன்றுகின்றதிடமோ அல்லது தோன்றுவதற்கு முன்பாகவோ நாங்கள் தான் அடுத்த ஆட்சி நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லி முடங்கப்படுகின்ற கட்சிகள் எல்லாம் எந்த நிலைமைக்கு போய் உள்ளது என்பதையும் நாம் பார்த்துதான் வருகிறோம்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வாறு அல்ல. 1957 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காணலாமா என கழக நிர்வாகிகள் தொண்டர்கள் செயல் வீரர்களிடம் தான் அண்ணா கேட்டார். அன்று அதற்கான வாக்கெடுப்பு நடத்தி சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டோம். அதனை தொடர்ந்து 1962ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 50 சட்டமன்ற தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தோம். அதனை தொடர்ந்து 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றோம். அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா தமிழ்நாடு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அளித்தார்.
பின்னர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து அவரை பாதுகாத்துக் கொள்ள இந்தியாவில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அப்போது பலர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது நாம் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கிறோம். அப்போது அவர்களிடமிருந்து நெருக்கடி நிலையை எதிர்க்கக் கூடாது அதை எதிர்த்தால் உங்களது ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என ஒரு தூது வருகிறது. ஆனால் அப்பொழுது கலைஞர் தனது உயிரை போனாலும் எனக்கு ஜனநாயகம் தான் முக்கியம் என அந்த தூதுவரை அனுப்பி வைத்து அதற்கடுத்த நாளிலேயே லட்சகணக்கான மக்களை ஒன்று திரட்டி, நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
தீர்மானத்தை கொண்டு வந்த அடுத்த நாள் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தோம். அதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து நாம் ஆட்சிக்கு வருகிறோம். அதன் பிறகு ஆட்சிக்கு வரவில்லை அதன் பிறகு ஆட்சிக்கு வந்தோம் இவ்வாறே வெற்றி பெற்றும் தோல்வியுற்றும் தற்பொழுது நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். நம்மைப் போல் வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது நம்மைப் போல் தோல்வியுற்ற கட்சியும் கிடையாது. வெற்றி தோல்வி இரண்டிலும் நமக்கு தான் பெருமை.
ஆகவே வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் பாடுபடுகின்ற கட்சி திராவிட முன்னேற்ற கழகம். இன்று இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள மக்களுக்கு நாம் தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா இல்லையா. திராவிட மாடல் ஆட்சி சொன்னதை மட்டும் அல்லாமல் சொல்லாததையும் செய்து பீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம் குழப்பத்தை ஏற்படுத்தலாம் அதன் மூலம் இந்த ஆட்சியை வீழ்த்தி விடலாம் என கனவு கண்டு சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் செவிசாய்க்காமல், கண்டு கொள்ளாமல் நம்முடைய இலக்கு நாடாளுமன்ற தேர்தல் தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40, நாடும் நமதே நாளையும் நமதே, தமிழ்நாட்டில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெற்றி மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காக இனிவரும் காலங்களில் முழுமையாக ஈடுபட போகிறோம் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“