குஜராத் சம்பவத்தை கண்டித்து சென்னையில் மறியல் நடத்திய திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது ஆகஸ்ட் 4-ம் தேதி கல்வீச்சு நடந்தது. இதில் ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குஜராத்தில் காங்கிரஸார் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதன்பிறகு இன்று (ஆகஸ்ட் 5) இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவரான ஜெயேஷ் தார்ஜி என்பவரை போலீஸார் கைது செய்தனர். ராகுல் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸார் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஜெயகுமார், மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே, ‘தன் மீதான தாக்குதல்களுக்காக போராட்டம் நடத்துவதை கைவிட்டு, குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி’ தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.