தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமடைந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 33,000 ஐ கடந்துள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இன்று முதல் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தமிழக அரசின் புதிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாக கருதப்படும் பால் கடைகள் இயங்குவது குறித்தான எந்த தகவலும் தமிழக அரசின் அறிக்கையில் இடம்பெறவில்லை. இதனால், பல்வேறு பகுதிகளில் பால் கடைகள் இயங்குவது தொடர்பான குழப்பங்கள் நீடித்த நிலையில், பால் கடைகளை 10 மணிக்கு மூட சொல்லி காவல் துறையினர் சில இடங்களில் மிரட்டியதாக, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமியிடம் பேசினோம். ‘பெரும்பாலான இடங்களில் பால் கடைகளை காலை 10 மணிக்கு மூடிவிட வேண்டும் என காவல்துறையினர் வற்புறுத்தி வருகின்றனர். கடைகளை மூடவில்லை என்றால் 5000 அபராதம் விதிப்பதாகவும், கடைகளுக்கு சீல் வைப்பதாகவும் காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.

ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மளிகை, பெட்டிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், அங்கும் பால் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், குழந்தைகள், நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருளாக விளங்கும் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி, சிலர் பாலை அதிக விலைக்கு விற்க கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கில், பால் கடைகள் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்பட்டது.
தற்போது, தமிழக அரசால் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பால் கடைகள் குறித்தான எந்த தகவலும் இடம் பெறவில்லை. இதனால், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றும் அதிகாரிகள் குழப்பமடைந்து, அத்தியாவசிய பொருள்களின் விற்பனைக்கு கூட தடை விதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஊரடங்கு தொடர்பான அறிக்கைகளில் அவ்வப்போது முன்னுக்கு பின் முரணான குழப்பமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
iஇன்று காலை ஊரடங்கு விதிமுறை மாற்றம் அமலாகி உள்ள சூழலில், அது தொடர்பான உத்தரவு நேற்று இரவு தான் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில், இன்று முதல் டீக்கடைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகிய நிலையில், டீக்கடைகளில் இன்றைய பயன்பாட்டிற்கு தேவையான பாலை நேற்றே ஆர்டர் செய்திருப்பர். தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், பல லிட்டர் பால் கடைகள் தோறும் வீணாகி உள்ளது. அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பால் கடைகள் குறித்தான எந்த தகவலும் இடம்பெறாததால், காவல்துறையினர் மற்ற கடைகளை மூடும் நேரத்தை குறிப்பிட்டு, பால் கடைகளையும் மூட சொல்லி கட்டாயப்படுத்துவதாக’ குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி லிட்டர் பால் அன்றாடம் விற்பனையாகி வருகிறது. நாளை முழு ஊரடங்கு அமலாக உள்ள சூழலில், மக்களுக்கு தேவையான பால் முழுவதையும் விநியோகஸ்தர்களின் கவுண்டர்கள் மூலம் விற்பனை செய்து விட முடியாது. இதனால், நாளை பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இன்றைய சூழலிலேயே காலை 10 மணிக்கு மேல் பால் கிடைக்கவில்லை.
நாளை மறுநாள் காலை 10 மணி வரை கடைகள் செயல்படும் நிலையில், எங்களிடம் பாலை சேமித்து வைப்பதற்கான வசதிகள் எவ்வளவு இருக்கிறதோ, அதை தான் நாங்கள் ஆர்டர் செய்வோம். இதனால், மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டீக்கடை, உணவகங்கள் ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் சூழலில், விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், கொள்முதல் செய்வதை நிறுத்துக் கொள்ளும்.
இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், மாடுகளிடம் இருந்து பாலை கறக்காமலும் இருக்க முடியாது. இது போன்ற இழப்புகளை, விவசாயிகள், பால் முகவர்கள் போன்றோர் சந்திக்காமல் இருக்கவும், அத்தியாவசிய பொருளான பாலினை, மருந்துக் கடைகள் போல இயங்க அனுமதி வழங்கிடவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக’, அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)