தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களாக இருக்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கும், கொடைக்கானல் மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே, மற்றும் ஜூன் மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விடுமுறை நாட்களில் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக ஊட்டி அல்லது கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்கள் தான்.
இதன் காரணமாக கோடை விடுமுறை நாட்களில், ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இந்த சுற்றுலா தளங்களுக்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டு இருந்தாலும், சீசன் காலம் என்று சொல்லப்படும் கோடை காலங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் மூலம் அங்கிருக்கும் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் நாட்களாக அமைகிறது.
அதேபோல் மற்ற நாட்களை விட இந்த சீசன் காலங்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கிருக்கும் மக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டாலும், தங்களின் வாழ்வாதாரம் கருதி அங்கிருக்கும் வியாபாரிகள் மற்றும் மக்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இதனிடையே சீசன் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இதனை சமாளிக்க கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று (மே7) முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இ-பாஸ் நடைமுறை குறித்து அறிவிக்கப்பட்டதில் இருந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொடைக்கானலில் உள்ள ஸ்பென்சர்ஸ் சூப்பர் மார்க்கெட் மேலாளரும், ஏ.கே.ஆர். உட் ஹவுஸ் நிர்வாகியுமான ராஜா என்பரை தொடர்கொண்டு கேட்டோம்.
இ-பாஸ் நடைமுறை எதற்காக?
கொடைக்கானலில் சீசன் காலங்களில், சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரிப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சிரமம் உள்ளது. இதன் காரணமாகத்தான் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த இ-பாஸ நடைமுறை, கொடைக்கானலில் உள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.
இ-பாஸ் நடைமுறை எப்படி வழங்கப்படுகிறது?
கொரோனா காலத்தில் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அப்போது சுற்றுலா வரும் அனைவரிடமும், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வைத்து சரிபார்க்கப்பட்ட பின்னரே கொடைக்கானல் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்த இ-பாஸ் யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம். ஒரு வாகனத்தில் 5 பேர் வருகிறார்கள் என்றால் அதில் ஒருவரின் பெயரில் இ-பாஸ் வாங்கினால் போதுமானது. கொரோனா காலத்தில் இருந்ததை விட இப்போது இ-பாஸ் வாங்குவது கடினம் இல்லை.
இந்த இ-பாஸ் நடைமுறையால் பாதிப்பு ஏற்படுகிறதா?
இந்த இ-பாஸ் நடைமுறையால் பாதிப்பு உள்ளது. மக்கள் சாதாரணமாக வந்து சென்ற ஒரு இடத்தில் தற்போது இ-பாஸ் வாங்கினால் தான் உள்ளே நுழைய முடியும் என்று கூறிவிட்டதால், சுற்றுலா பயணிகள் மனதளவில் சற்று சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக பலரும் கொடைக்கானல் வருவதை தவிர்க்கின்றனர். அதேபோல் இங்கிருக்கும் விபாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று சொல்லலாம்.
பொதுவாக ஊட்டியில் இருப்பது போல் இன்டஸ்டரியல், தேயிலை பறிப்பது போன்ற தொழில்கள் கொடைக்கானலில் இல்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வைத்து தான் இங்கிருக்கும் மக்கள், வியாபாரிகள் என பலரும் தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்தாலும், வருடத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய இந்த 3 மாதங்களும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
வியாபாரிகள் ஆண்டு முழுவதும் உழைத்தாலும் கிடைக்காத வருமானம் இந்த 3 மாதங்களில் கிடைத்துவிடும். இதனால் இந்த சீசன் காலத்தில் மக்கள் மற்றும் வியாபாதிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தற்போது இ-பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த சீசன் காலக்கட்டத்தில், கொடைக்கானல் ஏரி உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு கி.மீ தூரம் செல்ல, குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் ஆகும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், கொடைக்கானல் இப்போது சீசன் காலம் என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இ-பாஸ் நடைமுறை எல்லா நாட்களிலும் நடைமுறையில் இருக்குமா? உள்ளூர் மக்களுக்கும் இந்த நடைமுறை இருக்கிறதா?
சீசன் காலத்தில் மட்டுமே இந்த இ-பாஸ் நடைமுறை இருக்கும். இந்த ஆண்டு ஜூன் 30 வரை இந்த நடைமுறை இருக்கும். ஊட்டி மட்டும் கொடைக்கானல் மக்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை இருக்காது. கொடைக்கானல் பதிவு எண் கொண்ட வாகனங்களில் பயணித்தால் இ-பாஸ் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் கொடைக்கானலில் உள்ள அனைவருமே கொடைக்கானல் பதிவு எண் கொண்ட வாகனத்தை பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியுமா?
கடந்த இரு தினங்களுக்கு முன் நான் திண்டுக்கல் சென்று வந்தபோது கூட என் வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் கொடைக்கானல் திரும்பியபோது என்னிடமும் இ-பாஸ் கேட்டார்கள். நான் கொடைக்கானலில் தான் குடியிருக்கிறேன். இங்குதான் வேலை செய்கிறேன். ஆனாலும் இ-பாஸ் வாங்கிவிட்டுதான் வந்தேன். இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், வெளியியூர் சென்று திரும்பும் கொடைக்கானல் மக்களும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
மொத்தத்தில் இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக கொடைக்கானலில் வழக்கமான சுற்றுலா பயணிகளின் கூட்டம் இல்லை வியாபாரமும் இல்லை என்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. இந்த நடைமுறைக்கு எதிரான நீதிமன்றத்தில் முறையிட்டு தடை வாங்கினாலும் அதற்குள் இந்த ஆண்டு சீசன் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.