கேளிக்கை வரியாக 30 சதவீதத்தை கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. ஏற்கெனவே 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்திவரும் நிலையில், இந்த வரியைத் தங்களால் செலுத்த முடியாது என போர்க்கொடி தூக்கினர் சினிமாத் துறையினர். அத்துடன், நான்கு நாட்களுக்கு தியேட்டர்களை மூடி தங்கள் எதிர்ப்பையும் காட்டினர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனாலும், கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கக் கோரி வலியுறுத்தி வந்தனர் சினிமாத் துறையினர். கடந்த 6ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல், தங்கள் எதிர்ப்பைக் காட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் சினிமாத்துறையினர் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின்போது, கேளிக்கை வரியில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கக் கோரித்தான் ஆரம்பத்தில் கேட்டிருக்கின்றனர் சினிமாத் துறையினர். ஆனால், தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. வேண்டுமானால், சதவீதத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
அதன்படி, இன்று நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர். ஏற்கெனவே அறிவித்துள்ள 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் குறைத்து, 8 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், டிக்கெட் கட்டணம், ஜி.எஸ்.டி.யுடன் இந்த 8 சதவீத கேளிக்கை வரியும் இணையும். எனவே, மறுபடியும் டிக்கெட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.