தமிழக சட்டசபையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.ரா திருமகன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த ஈ.வெ.ரா திருமகன் அப்பா இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதேபோல் அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் சேர்த்து இந்த தொகுதியில் மொத்தம் 72 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும் மீண்டும் வெற்றி பெற திமுகவும், தங்களது எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அ.தி.மு.க.வும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 25-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ளனனர்.
இந்நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார வியூகம் குறித்து தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க.வின் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணையத் தலைவர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.ஏ. ராஜசேகர் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர் கூறுகையில்,
அ.தி.மு.க தரப்பில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பிரச்சாரத்திற்கு வந்த அனைவருக்கும் பகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதால் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வசதியாக உள்ளது. அந்த வகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் நாங்கள் இன்று தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் அனைத்து வாக்காளர்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் வாக்கு சேகரிக்கும் பகுதியில் மொத்தம் 1236 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 633 இஸ்லாமியர்களும், மற்ற வாக்காளர்கள் 603 பேர் உள்ளனர். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் நாங்கள் 300 பெண்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட ஒரு பெரிய குழுவாக இணைந்துள்ளோம். இந்த பகுதியில் உள்ள மொத்த உள்ள 1200 வாக்காளர்களை 12 ஆக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் 100 வாக்குகள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் பிரித்து கொடுத்து தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
இதில் ஒவ்வொரு நபருக்கும் 4 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் சுமார் 350-க்கு மேற்பட்டோர் அடங்கிய குழுவுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். பிரச்சாரம் முடியும் கடைசி நாளான பிப்ரவரி 25-ந் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் இதே திட்டத்தைதான் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக செயல்படுத்த உள்ளோம்.
வெளிநாடு மற்றும் வெளியூர் வாக்காளர்களை எப்படி தொடர்புகொள்கிறீர்கள்?
வெளிநாடு வாக்காளர்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் வெளியூரில் உள்ள வாக்காளர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இவர்கள் பெரும்பாலானவர்கள் தற்போது ஊருக்கு வந்துவிட்டார்கள். அதேபோல் தபால் ஓட்டுக்களையும் கண்கானித்து வருகிறோம். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் படி தேர்தல் பிரச்சாரங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் செல்லும் இடமெங்கிலும் மக்கள் நல்ல மரியாதை அளித்து வருகின்றனர்.
அனுமதியின்றி செயல்பட்ட தேர்தல் பணிமனைகள் சீல் வைக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து?
நாங்கள் அனுமதி இல்லாமல் தான் பணியை தொடங்கினோம். 80 அடிக்கு ஒரு பணிமனை என்று செயல்பட்டு வந்தோம். ஒரு வாரம் இருந்தது. அதன்பிறகு வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் அதை எடுத்துவிட்டோம். அதிமுகவை தான் அவர்கள் பார்க்கிறார். ஆனால் திமுக கடல் போல் பணிமனைகளை திறந்து வைத்துள்ளனர். பிபி அக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரில் 2 ஏக்கர் நிலத்தில் ஒரே இரவில் தார் சாலை அமைத்து அமைச்சர் கே.என்.நேரு அங்கேயே இருந்து மின் கம்பங்கள் அமைத்து மின்சார வசதி செய்துள்ளார். 200 கார்கள் பார்க்கிங் செய்யும் அளவுக்கு அமைத்துள்ளனர். ஆனால் எங்கள் அலுவலகத்திற்கு மட்டும் சீல் வைத்துவிட்டார்கள் மறுநாள் நாங்கள் அனுமதி வாங்கி மீண்டும் அலுவலகத்தை செயல்பாட்டில் கொண்டு வந்தோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மீது தாக்குதல் பற்றி உங்கள் கருத்து?
இது தேவையில்லாத ஒன்று. வாக்கு கேட்பது அவர்களின் உரிமை. அவர்கள் வாக்கு சேகரிக்கும்போது நீங்களும் வாங்கு சேகரிக்கலாம். அதை விட்டுவிட்டு அவர்களுக்கு எதிராக கோஷம் போடுவது தவறான செயல் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.