டெல்லி ஜந்தர் மந்திரில் 41 நாட்களாக தமிழக விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் நமக்கு நினைவிருக்கலாம். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் அந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், உறுதியளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தற்போது சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த அய்யாக்கண்ணு, "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டோம் என்று முதல்வர் கூறினார். ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனால், சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். 32 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்றார்கள். இப்போது, ஐந்து நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி தர முடியும் என்கின்றனர்,
அதோடு மட்டுமில்லாமல், நேற்று மாலையே போராட்டத்தை கைவிடக் கூறி போலீசார் எங்களை கைது செய்ய வந்தனர். நான் அவர்களிடம்,' நாங்கள் ஏற்கெனவே முக்கால்வாசி நிர்வாணமாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை கைது செய்து முழு நிர்வாணமாக்கிய பெருமையை காவல்துறையினருக்கு கிடைக்க வேண்டுமா?' என்றேன். இதனால், எங்களை கைது செய்யவில்லை.
இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைப்பதாக கூறியுள்ளனர். எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், இந்த போராட்டம் தொடரும். எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க இளைஞர்கள் வருவதைப் பார்த்து, யாரும் எங்களைச் சந்திக்கக் கூடாது என்று இரு புறமும் பேரிக்கார்டு வைத்து அடைத்து விட்டனர். எங்களுக்கு இரவு உணவு கூட 12 மணிக்குதான் வழங்கினர்.
இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? எங்களது இயக்கம் சார்பாக சட்டத்துக்கு உட்பட்டு எங்கும் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம். கார்ப்ரேட் மற்றும் வெளிநாட்டு உணவு உற்பத்தி மூலம் பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் அரிசி தற்போது வர ஆரம்பித்து விட்டது. இந்த உணவுகள் மக்களை முடவர்களாவும், அறிவற்றவர்களாகவும் மாற்றும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகளான நாங்கள் உற்பத்தி செய்யும் உணவை உண்டால்தான் முடியும். இல்லையென்றால், கிழக்கு இந்திய கம்பெனி எப்படி மக்களை அடிமைகள் ஆக்கியதோ?, அப்படி இந்த பிளாஸ்டிக் உணவுகள் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களின் உணர்வுகளை, உடல்களை முடமாக்கி அடிமையாக்கி விடுவார்கள்.
எனவே, விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்வர வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, விவசாய சங்கத்தினர் சந்தித்தனர். அதில், கோரிக்கையை முதல்வர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். அப்போதும் நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் இரண்டு மாதம் கழித்து இதே இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தவோம் என்று கூறினார்.