டெல்லியில் மீண்டும் தமிழக விவசாயிகள் போராட்டம் : அய்யாகண்ணு அறிவிப்பு

டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.

டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.

‘தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜப்தி நடவடிக்கைகள் கூடாது!’ என ஜூலை 7-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவருமான அய்யாகண்ணுவிடம் மேற்படி உத்தரவு குறித்து ‘ஐஇ தமிழ்’க்காக கருத்து கேட்டோம்.
“உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதில் மத்திய, மாநில அரசுகள் உருப்படியாக ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? என்பது தெரியவில்லை. டெல்லியில் நாங்கள் தொடர் போராட்டம் நடத்தியபோதே அங்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும்; விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும்; விவசாய கடன்களுக்காக ஜப்தி கூடாது ஆகியவைதான் எங்களது பிரதான கோரிக்கைகள்! நேற்று வரை தமிழகத்தில் விவசாய கடன்களுக்காக நகைகளை ஏலம் விடுதல், டிராக்டர்களை தூக்கிக்கொண்டு செல்லுதல் ஆகியன நடந்திருக்கின்றன.

மத்திய அரசு விவசாயிகளுக்கு அடுத்த பருவத்திற்கான இடுபொருட்களை மானிய விலையில் தருவதாக கூறுகிறது. தண்ணீரே இல்லாத சூழலில், நீங்கள் இடுபொருட்களை மானிய விலையில் கொடுத்து என்ன பலன்? எனவே விவசாயிகளின் இழப்பீடுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.
தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி ஏக்கரில் விவசாய பயிர்கள் அழிந்தன. இதற்காக 29 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக உதவி வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது எங்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜாராமன் குறுக்கிட்டு, ‘ஒரு கிராமமே அழிந்தால்தான் பயிர் காப்பீடு வழங்கும் வகையில் விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு பஸ்ஸில் பயணிக்கும் மொத்த பேரும் இறந்தால்தான் நிவாரணம் வழங்குவோம் என கூறுவதுபோல இது இருக்கிறது!’ என வாதிட்டார்.   அதன்பிறகும் மத்திய அரசு இதை புரிந்துகொண்டு, தனிநபர் இழப்பீடு வழங்க தயாராகவில்லை.

எனவே திட்டமிட்டபடி ஜூலை 14-ம் தேதி முதல் டெல்லியில் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். டெல்லிக்கு கிளம்பும் முன்பாக 14-ம் தேதி மதியம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். அவர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அப்போது கேட்போம்.

ஆனாலும் மத்திய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடம் நிச்சயம் நடக்கும்!” என்றார் அய்யாகண்ணு. மீண்டும் ஜந்தர் மந்தர், விதவிதமான போராட்டங்களை எதிர்கொள்ளத் தயாராகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close