இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பவுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 92 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைகளில் அடைத்தனர். அதேபோல் அவர்களது 150-க்கும் மேற்பட்ட படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு பல்வேறு கடிதங்களையும் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, மீனவர்களை விடுவிக்கும் பொருட்டு இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்தத்தை நடத்தியது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட 77 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் 16 பேர் ராமேஸ்வரத்தையும், 6 பேர் நம்புதாளையையும், 12 பேர் மண்டபத்தையும், 18 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தையும், 17 பேர் காரைக்கால் மாவட்டத்தையும், 8 பேர் நாகப்பட்டினத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை தவிர இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 15 பேர் உள்ளனர்.
முன்னதாக, மீனவர்களின் 22 படகுகளை முதற்கட்டமாக விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அந்த படகுகள் இன்னும் தமிழகம் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.