Tamilnadu News : ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக முதல்வர் பழனிச்சாமி தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திமுக உள்ளிட்ட கட்சிகள், தேவையைக் கருத்தில் கொண்டு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும், தமிழக அரசின் உச்சகட்ட கண்காணிப்பில் அனுமதி அளிக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில், அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசே ஆக்சிஜனை தயாரிக்க அனைத்துக் கட்சிகளின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளின் இந்த முடிவுக்கு, தூத்துக்குடி மக்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவும், சமூக செயற்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுள் ஒருவரான தமிழர் விடுதலைக் கொற்றத்தின் தலைவர் அ.வியனரசுவிடம் இது குறித்து பேசினோம். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புக்கு உள்ளான மக்களிடமும், எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் மக்களுடையே உணர்வுகளுக்கு எதிரான நியாமற்ற முடிவையே அனைத்துக் கட்சிகளும் எடுத்துள்ளன. தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில், ஆலையை திறக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்படி கூட்ட முடியும். தூத்துக்குடியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் மக்களை போராட்டக் களம் அழைத்துச் செல்லும் படியாகவே அவர்களின் முடிவு இருக்கிறது. கொரோனா பரவலை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் முடிவெடுத்திருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதா என கேள்வியை எழுப்பி உள்ளார்.
செயற்கையான ஆக்சிஜன் பற்றாக்குறை எனும் சூழலை உருவாக்கி, திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். லாப நோக்கில் மட்டுமே செயல்படும் வேதாந்தா குழுமம், ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆலையை திறக்க சதித் திட்டம் தீட்டி வருகிறது. கொடுமையான நச்சு திரவங்கள் ஸ்டெர்லைட் ஆலையினுள் உள்ளது என வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த போதும் கூட, ஆலையை திறக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. ஆக்சிஜனுக்காக நாடே அல்லாடி வரும் நிலையில், இவ்வளவு காலம் இல்லாத அக்கறை தற்போது எங்கிருந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை யார் கண்காணிப்பார்கள், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றிப் பெற்றவர் எம்.பி கனிமொழி. இந்த நிலையில், அவர் இன்று நடைபெற்றக் கூட்டத்தில் ஆலையை திறக்கலாம் என கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. வாக்குறுதியை நிறைவேற்றாமல், சதி திட்டத்திற்கு துணை போகும் எம்.பி கனிமொழியை பதவி விலகக் கோரிக்கூட போராட்டம் நடத்த ஆயத்தமாக உள்ளோம். ஆக்சிஜன் உற்பத்திக்காக தனியார் ஆலையை நம்பியா தமிழக அரசு ஆட்சி நடத்தி வருகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் வழக்கறிஞர் ஜிம் ராஜ் மில்டனிடம் பேசினோம். ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதியை தடையின்றி வழங்குவதற்காக கடந்த ஆண்டு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், முக்கிய மருத்துவமனைகளிலும் சுமார் 172 ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்களை நிறுவ மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வெறும் 5 ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்கள் மட்டுமே தற்போது வரை தொடங்கி உள்ளதாக தகவல்கள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை நேரடியாக உறிஞ்சி, அவற்றை திரவ ஆக்சிஜனாக மாற்றி நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அளிக்க இயலும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு எந்த ஒரு அறிவியல் பூர்வமான தரவுகளையும் மேற்கோள் காட்டி, தற்போது ஸ்டெர்லைட் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் முடிவை ஆதரிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தை காண்பித்து ஆலையை மீண்டும் திறக்க அரசுகள் முனைப்புக் காட்டி வருகின்றன. கொரோனா தொற்றுப் பரவிய ஒன்றரை ஆண்டுகளில் முறையான தொலைநோக்குத் திட்டங்களோடு செயல்படாமல், ஆக்சிஜன் இலவசமாக தருகிறோம் என்ற வேதாந்தா நிறுவனத்தின் ஒற்றை சொல்லுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. திமுக, அதிமுக கட்சிகளின் இந்த முடிவு மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை பராமரிப்பு செய்வதற்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வரை செலவாகும். இதை பராமரிக்க தமிழக அரசுக்கு வசதிகளை இல்லை என குறிப்பிடப்பட்டு, தமிழக அரசை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொண்டு ஸ்டெர்லைடை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தமிழகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக அவர் கூறினார், மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் 40 நிபுணர்கள் உள்ளனர். இவர்களாலேயே அந்த பணிகளை மேற்கொள்ள இயலும். இதனால், தமிழக அரசால் ஆலையை ஏற்று நடத்த இயலாது என குறிப்பிட்டுள்ளதையும் ஏற்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வந்து, நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம். இல்லையென்றால், வேதாந்தா குறிப்பிட்டுள்ள 40 நிபுணர்களையும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யலாம்,’ என அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சு.ப.உதயகுமாரிடம் பேசினோம். 'மக்கள் கால் நூற்றாண்டு காலம் போராடி, உயிர்த்தியாகம் செய்த பின், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது, திடீரென மத்திய அரசும், தமிழக அரசியல்வாதிகள் சிலரும் சேர்ந்து எடுக்கும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது. வேதாந்தா குழுமத்துடன் இயன்ற அளவு உச்சநீதிமன்றத்தில் நேற்று வரை போராடியது உண்மைதான். இருப்பினும், கடைசி நேரத்தில் உறுதியாக நிற்காமல் போராடிய மக்களுக்கு அநீதியை இழைத்துள்ளது.
குறிப்பாக, ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி தருகிறோம் என அரசுகள் அறிவித்திருப்பது நெருடலாகவே உள்ளது. அனுமதி வழங்கப்பட்டு ஆக்சிஜன் தயாரித்தாலும் கூட, கூடங்குளத்தில் நடைபெற்றதை போல, அவ்வப்போது, பராமரிப்பு பணிக்களுக்காக செல்கிறோம் என்ற பெயரில் தங்களது பணிகளை திரும்ப தொடங்க வாய்ப்புள்ளது. இதை நாம் கண்காணிக்கவும் இயலாது.
ஸ்டெர்லைட் ஆலையில், தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆக்சிஜனே உற்பத்தி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை, நோயாளிகளுக்கு அளிப்பதற்க்கு முன் பல்வேறு கட்டங்களில் தேவையில்லாத மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு மருத்துவ ஆக்சிஜனாக மாற்றப்படுவதாக கருத்து நிலவுகிறது. கடந்த 3 ஆண்டு காலமாக பூட்டியே கிடந்த ஸ்டெர்லைட் ஆலையில், உடனடியாக ஆக்சிஜன் தயாரித்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துவது சாத்தியமானதா என்பது கேள்விக்குறி தான்.
தமிழக அரசின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரக் காலத்தில் முடிவடைய உள்ள நிலையில், இந்த முடிவு தேவையில்லாதது. புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவியேற்றவுடன் இந்த விவகாரத்தை கையாண்டிருக்கலாம். தற்போது, தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் கையிறுப்பு உள்ள நிலையில், ஒரு வார காலத்திற்கு பொறுமை காக்க இயலாத எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். பல்வேறு முயற்சிகளை கையாண்டு ஆலையை திறக்க முயற்சிகள் எடுத்த வந்த நிலையில், இவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு காரணமாக கிடைத்துள்ளது’, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.