தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50-லிருந்து, ரூ.25-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மாதந்தோறும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக அரை கிலோ சர்க்கரையும், ஒரு அட்டைக்கு அதிகபட்சமாக 2 கிலோ சர்க்கரையும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அதேபோல், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒன்றரை கிலோ சர்க்கரையும், ஒரு அட்டைக்கு அதிகபட்சமாக 5 கிலோ சர்க்கரையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ரூ.13.50-க்கு வழங்கப்பட்டு வரும் சர்க்கரையின் விலை, வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரூ.25-ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனினும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சர்க்கரை தொடர்ந்து ரூ.13.50-க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2016-2017-ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் அளவானது, 33,636 டன்னாக உயர்ந்த நிலையில், மத்திய அரசு 10,833 மெட்ரிக் டன் மட்டுமே வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதம் உள்ள சர்க்கரையை வெளி சந்தையில் வாங்கி விற்பனை செய்து வந்தது எனவும், இதற்காக தமிழக அரசு மாதந்தோறும் மத்திய அரசிடம் இருந்து ரூ.20 கோடி பெற்று வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்திலுள்ள 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளுக்கு மட்டும் 1,864 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மட்டும் மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.20 கோடியிலிருந்து, ரூ.3.45 கோடியாக குறைந்துவிட்டது எனவும், இதனால், தமிழகத்திற்கு மாதம் 108 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 33,636 மெட்ரிக் டன் சர்க்கரைக்கும் சேர்த்து தமிழக அரசுக்கு ரூ.1,300 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் சுமையை சமாளிக்கவே சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.