வி.கே.சசிகலா பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு காரணமில்லை என தமிழக கவர்னரை சந்தித்த பிறகு அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியபோது, கட்சியின் முடிவு இல்லாமல் எந்த சந்திப்புகளையும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நடத்த முடியாது. மீடியாவில் பேசவும் முடியாது. ஆனால் இப்போது அந்தக் கட்டுப்பாடு இல்லாததால் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஒவ்வொருவரும் முழு சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயனுக்கு, கட்சியில் இப்போது குறிப்பிடத்தக்க பதவி இல்லை. ஆனாலும் நீண்டகாலம் பாஜக-வில் இயங்கியவர் என்ற அடிப்படையில், பழைய பாஜக நண்பர்களை தங்கு தடையின்றி சந்தித்து வருகிறார். பிரதமர் மோடியில் ஆரம்பித்து, தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ் வரை விரும்பிய நேரத்தில் சந்தித்து வந்ததால் மைத்ரேயனுக்கான அரசியல் முக்கியத்துவம் அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தச் சூழலில் இன்று (7-ம் தேதி) தனி ஆளாக சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனுக்கு சென்று புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார் மைத்ரேயன். வழக்கம்போல நட்பு அடிப்படையிலான சந்திப்பு என்றே இதை வர்ணித்தார் மைத்ரேயன். கவர்னரின் பதவியேற்புக்கு அடுத்த நாளே கவர்னரை சந்தித்த அரசியல்வாதிகள் விஜயகாந்தும், மைத்ரேயனும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்னரை சந்தித்து திரும்பிய மைத்ரேயன் நிருபர்களிடம் பேசுகையில், ‘சசிகலாவின் கணவருக்கு மேஜர் ஆப்பரேஷன் நடந்திருப்பதால், தனிப்பட்ட காரணத்திற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசும் போலீஸும் ஏதாவது தகவல்கள் பறிமாறியிருக்கலாம். சூழ்நிலையை பொறுத்து அவருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கலாம். அந்த நிபந்தனைகளுக்கு தமிழக அரசு காரணமில்லை.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அடுத்த வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடைபெறும். அன்று தினகரன் தரப்பில் வாதம் நடைபெறலாம். சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது’. இவ்வாறு மைத்ரேயன் எம்.பி. கூறினார்.