/tamil-ie/media/media_files/uploads/2017/11/arasar-1.jpg)
சென்னை ஆதம்பாக்கத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட இந்துஜாவின் தாய்-சகோதரி சிகிச்சை செலவை அரசு ஏற்கவேண்டும் என திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் என்ஜினியர் இந்துஜா என்பவரை ஆகாஷ் என்ற வாலிபர் கடந்த 13 ஆம் தேதி பெற்ற தாய், தங்கை முன்னிலையில் பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. இதனை தடுக்க வந்த தாயார் ரேனுகா, தங்கை நிவேதா ஆகியோர் மீதும் ஆகாஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.
இதில் படுகாயம் அடைந்த இவர்கள் சென்னை வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒரு திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதலாகும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற ரேனுகா மற்றும் நிவேதா ஆகியோரை இன்று காலை 11.30 மணியளவில் நேரில் சந்தித்து சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தேன். படுகாயம் அடைந்த இவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் தான் இத்தகைய கொடூர கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. இதை தடுத்த நிறுத்த முயன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள படுகாயத்திலிருந்து சிகிச்சை பெறுவதற்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி வழங்கப்படவில்லை எனில் மேற்கொண்டு உதவி செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.