நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்து நிராகரித்த விவரங்களை பொதுமக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு, தீர்மானம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், மீண்டும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு தடை எதுவும் இல்லை. தமிழக அரசு விரும்பினால், தீர்மானத்தை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் பெற்றோர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம் படிக்க விரும்புகிற தமிழக மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயம் ஆக்கியபோது, தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, மருத்துவராக வேண்டும் என்பதை லட்சியமாக எண்ணிய பல மாணவர்கள் பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. இதனால், அனிதா, ரித்துஸ்ரீ, வைஷியா, மோனிஷா, பாரதபிரியன் உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை நீருபூத்த நெருப்பாகவே இருக்கிறது.
இந்த சூழலில்தான், நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்து நிராகரித்துள்ளார் என்பதும் அது குறித்து தமிழக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனால், தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற முயற்சிக்குமா? அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவாரா? அப்படி ஒப்புதல் அளித்து தமிழகத்தில் நீட் விலக்கு பெறப்பட்டால், ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பழகியிருக்கும் மாணவர்கள் மீண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? இப்படியான பல கேள்விகள் பெற்றோர்களிடையேயும் மாணவகளிடையேயும் எழுகின்றன.
இதில், நீட் தேர்வு பற்றி அரசின் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் அல்லது அரசு எந்தமாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பாஜகவை சேர்ந்த ராகவன் கூறுகையில், “தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய நீட் விலக்கு தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமால் நிராகரித்துவிட்டார் என்று 2017 ஆம் ஆண்டு ராஷ்டிரபதி இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளத்து. அப்படி ஒப்புதல் அளிக்க மறுக்கப்பட்ட சட்ட மசோதாவை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் மீண்டும் பரிசீலனை செய்ய கோரலாம். ஆனால், தமிழக அப்படி எதுவும் செய்யவில்லை. அந்த ஆறு மாத காலமும் முடிந்துவிட்டது. ஏன் அவர்கள் பரிசீலனை செய்ய கோரவில்லை என்பதற்கு தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டும். அதோடு, நீட் விவகாரத்தில் பாஜகவைப் பொருத்தவரை மருத்துவப் படிப்பில் சேர் நீட் தேவை. ஆரம்பத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அதனை நாங்களும் கூறியுள்ளோம். அவைகள் எல்லாம் சரி செய்யப்பட்டுள்ளன. தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழிலும் எழுதலாம். தற்போது நீட் தேர்வு மூலம் சாமானிய ஏழைகளின் குழந்தைகளும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்கின்றனர். தமிழக அரசு இனியும் ஊடகங்களில் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசு மாணவர்களைக் குழப்பாமல் நீட் தேர்வை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இது குறித்து திமுகவின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகையில், “முதலில் இங்கே நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. அதிமுக பெயரில் நடக்கும் பாஜக ஆட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் இந்த அரசு, நீட் தேர்வை எதிர்க்காமல் அதை நடைமுறைப்படுத்துகிறது.
நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் 2017 செப்டம்பர் மாதமே ஒப்புதல் அளிக்க மறுத்து நிராகரித்துவிட்டார். ஒப்புதல் அளிக்க ஏன் மறுக்கப்பட்டது என்பது குறித்து குடியரசுத் தலைவர் அதற்கான காரணங்களை தெரிவித்திருப்பார். அதை சரி செய்து மீண்டும் அந்த திர்மானத்தை தமிழக அரசு ஆறுமாதங்களுக்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி அனுப்பலாம். ஆனால், தமிழக அரசு அப்படியான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. குடியரசுத் தலைவர் நிராகரித்ததை பொதுமக்களுக்கும் தெரிவிக்கவில்லை.
அதன் பிறகு மீண்டும் அதே தீர்மாணத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை. ஆனால், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு நீட் தேர்வை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் 60 சதவீதம் பேர் பிளஸ் 2 வை முடித்துவிட்டு உடனடியாக சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்தவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், இந்த நீட் தேர்வு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை குறைத்துள்ளது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாழாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு, நீட் தேர்வில் குறைந்த பட்சம் மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுகிற பணக்காரவீட்டு பையன்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து டாக்டராகலாம். ஆனால், அதைவிட சற்று கூடுதலாக மதிப்பெண் எடுத்துள்ள ஏழை மாணவன் டாக்டராக முடியாது. தமிழக அரசு நீட் விவகாரத்தில் அரசு நீட் தேர்வை எதிர்க்கிறது என்று கூறி மாணவர்களுக்கு தெம்பு அளித்துவிட்டு மறுபுறம் நீட் தேர்வை நடைமுறைப்படுத்துகிறது. அரசின் இந்த மாறுபட்ட நிலையால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.” என்று கூறினார்.
தமிழக அரசு நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டிலும் அதை செயல்படுத்துவதிலும் உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையோடும் நடந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.