மருத்துவ படிப்பில் 85% இட ஒதுக்கீடு : சுப்ரீம் கோர்ட்டில் அரசு உறுதி!

மருத்துவ நுழைவுத் தேர்வில், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில், முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்தது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.

நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது.

தமிழக அரசின் இந்த 85% இட ஒதுக்கீடு உத்தரவிற்கு, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின்படி படித்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வில், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள். இது தொடர்பாக அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஜுலை 4-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது ஏன் என்பதற்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இதையடுத்து இதற்கான நோட்டீஸ் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸுக்கு இன்று பதில் அளித்த தமிழக அரசு, “மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறியுள்ளது. மேலும், இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்த்தில் இவ்வாறு பதிலளித்தார்.

×Close
×Close