நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற விஜயபாஸ்கர் டெல்லி விரைகிறார்

நீட் அவசர சட்ட வரைவு நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படும்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தகுதிப் பட்டியலை தயார் செய்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசு நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளார்.

சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால், மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது. ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்கும். இதுகுறித்து மாநில அரசு ‘அவசரச் சட்டம்’ கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி அந்த தனி அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது” என உறுதிபட தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்கு பின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பேட்டியளித்த விஜயபாஸ்கர் “நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் இதற்கான அவசர சட்ட வரைவு சமர்பிக்கப்படும். நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு என்ற அறிவிப்பு, மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மாலை டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close