டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 12,000-பேருக்கு அரசு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழு தமிழகம் வந்தது. இந்த நிலையில், தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அஷ்வினி குமார் கூறும்போது: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் இன்னும் 6 மாதங்களில் தேர்வு செய்யப்படும். டெங்கு காச்சல் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் .
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்வோம். விரைவில், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதோடு, டெங்கு காய்ச்சல் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்று கூறினார்.