கவர்னர் மாளிகைக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து தமிழ் கற்கிறார், கவர்னர் பன்வாரிலால் புரோகித். தமிழை, ‘செம்மொழி, அழகான மொழி’ என்றும் அவர் பாராட்டினார்.
தமிழக கவர்னராக கடந்த மாதம் 6-ம் தேதி பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றார். வித்யாசாகர் ராவ் பொறுப்பில் இருந்தபோது நிலவிய அரசியல் பரபரப்பு இப்போது தமிழகத்தில் இல்லை. முன்பு கவர்னரை சர்வ கட்சியினரும் நாடிய வேளைகளில் எல்லாம் அவர் மும்பையில் இருந்தார். ஆனால் இப்போது நிரந்தர கவர்னராக பன்வாரிலால் புரோகித் வந்தபிறகு தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
ஆனாலும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிஸி! தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்ட பன்வாரிலால், தமிழ் கற்க ஆரம்பித்திருக்கிறார். இதற்காக சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு ரெகுலராக தமிழ் ஆசிரியர் ஒருவர் வந்து போகிறார். இது ஏதோ, கிசுகிசுவாக வெளியான செய்தி என நினைத்துவிடாதீர்கள். இன்று (நவம்பர் 8) ராஜ்பவனின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்தச் செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ள இதர தகவல்கள் வருமாறு: நாக்பூர் தொகுதியில் இருந்து 3 முறை லோக்சபாவுக்கு தேர்வு பெற்றவரான புரோகித், மத்திய இந்தியாவின் பழமையான ஆங்கில நாளிதழான ‘தி ஹிடவாடா’வின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றியவர். அவர் கல்வியாளர், சமூக செயல்பாட்டாளர், பேச்சாளர், தேசிய சிந்தனையாளர் என பன்முக திறன் பெற்றவர்.
இந்தி, ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். தமிழ் மீது அவர் கொண்ட ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக ஒரு தமிழ் ஆசிரியர் மூலமாக தமிழ் கற்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் , அழகான செம்மொழி என கவர்னர் புரோகித் குறிப்பிட்டார். இதை படிப்பதன் மூலமாக இங்குள்ள மக்களுடன் நன்கு கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்ள முடியும் என கவர்னர் கருதுகிறார்.
இவ்வாறு கவர்னர் மாளிகை முதன்மைச் செயலாளர் மூலமாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.