Advertisment

தமிழக ஆளுனரின் புதிய செயலாளர் : யார் இந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ்?

தமிழ்நாடு ஆளுனரின் புதிய செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, governor banwarilal purohit, r.rajagopal ias, ramesh chand meena ias, raj bhavan

தமிழ்நாடு ஆளுனரின் புதிய செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தமிழ்நாடு ஆளுனரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். முதன்மை செயலாளர் அந்தஸ்திலான இவர், ராஜஸ்தானை சேர்ந்தவர்! தமிழ்நாடு புதிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தின் அதிரடிகளில் ஒன்றாக, அவரது செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவும் மாற்றப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுனரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர், ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.! இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று (நவம்பர் 28) வெளியிட்டார்.

ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., தமிழகத்தை சேர்ந்தவர்! தமிழை தாய் மொழியாகக் கொண்ட இவருக்கு ஆங்கிலத்துடன் சமஸ்கிருதமும் சரளமாக தெரியும். 1984-ம் ஆண்டு ‘பேட்ச்’ ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர். இவரது மனைவி மீனாட்சி ராஜகோபாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். அவர், தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையராக பணியாற்றுகிறார்.

ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., 1990-களின் இறுதியில் கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலத்துறை, சிமெண்ட் கார்ப்பரேஷன், வேளாண்மைத்துறை, திட்டக்குழு, கலால் துறை, காதி மற்றும் கைத்தறிதுறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர் மற்றும் செயலாளராக பணி செய்திருக்கிறார்.

கடந்த 2014 பிப்ரவரி 6-ம் தேதி முதல் டெபுடேஷனில் மத்திய அரசுப் பணிக்கு சென்றார். கடைசியாக அங்கு உள்துறைக்கு உட்பட்ட மாநிலங்களின் எல்லை நிர்வாக ஆலோசகராக பணியில் இருந்தார். தற்போது தமிழ்நாடு ஆளுனரின் செயலாளராக மீண்டும் தமிழக பணிக்கு திரும்புகிறார். ‘பெரிய அளவில் ஆட்சியாளர்களுடன் நெருங்கிவிடக் கூடியவர் இல்லை. விதிமுறைகளுக்கு புறம்பாக இவரிடம் எதையும் யாரும் எதிர்பார்க்க முடியாது’ என்றே ராஜகோபால் ஐ.ஏ.எஸ். பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான இவருக்காகவே, தமிழ்நாடு ஆளுனரின் செயலாளர் பதவி தற்காலிகமாக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாநில தலைமைச் செயலாளருக்கு இணையாக இவரது தகுதி மற்றும் கடமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதாக அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு ஆளுனரின் செயலாளராக பணியில் இருந்த ரமேஷ் சந்த் மீனா, ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்! பொதுவாகவே தமிழ் அறியாதவர்களே தமிழக ஆளுனராக வருவதால், அவர்களது செயலாளர் தேர்வும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளாகவே இருக்கும். அதற்கு மாறாக தமிழையும், தமிழகத்தின் பூகோளம், அரசியல் நிலவரங்களை அறிந்த ஒரு அதிகாரியை ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தனது செயலாளராக தேர்வு செய்திருப்பது ஆட்சியாளர்களுக்கு புளியை கரைத்திருக்கிறது.

 

Governor Banwarilal Purohit Raj Bhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment