Advertisment

‘ராஜ்பவன் ராஜதந்திரி’ ரமேஷ் சந்த் மீனா மாற்றம் : கிலியில் அதிமுக ஆட்சியாளர்கள்

ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில் அரசுக்கு உதவும் ராஜ தந்திரியாக கோலோச்சிய ரமேஷ் சந்த் மீனா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
governor banwarilal purohit, r.rajagopal ias, ramesh chand meena ias, raj bhavan

ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில் அரசுக்கு உதவும் ராஜ தந்திரியாக கோலோச்சிய ரமேஷ் சந்த் மீனா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி!

Advertisment

தமிழ்நாடு ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில், கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கவர்னரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர் ரமேஷ் சந்த் மீனா. நான்கே முக்கால் ஆண்டுகள் ஆளுனரின் செயலாளராக இருந்த அவரை நேற்று(28-ம் தேதி) அங்கிருந்து மாற்றி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு மேம்பாட்டுக் கழகத் தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ரமேஷ் சந்த் மீனாவுக்கு பதிலாக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.ராஜகோபால், ஆளுனரின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவும் டெபுடேஷனில் மத்திய உள்துறையில் பணியாற்றிய ஆர்.ராஜகோபால் மத்திய அரசு மற்றும் ஆளுனரின் விருப்பத்தின் பேரில் இந்தப் பதவிக்கு மாறுதலாகி வந்திருப்பதாக கூறப்படுவதுதான் விசேஷம்!

ரமேஷ் சந்த் மீனாவை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்திருப்பது, (ஆவணங்களின் படி) தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தான்! ஆனால் இந்த உத்தரவு தமிழக ஆட்சியாளர்களுக்கு பேரிடியான உத்தரவு என்பது கோட்டை முழுவதும் உணரப்படும் ரகசியம்! காரணம், கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக ஆளுனர் மாளிகையில் ரமேஷ் சந்த் மீனா ஆற்றியிருக்கும் பணி அப்படி!

2013-ல் ஆளுனரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா புகுந்த காலகட்டம், மிக நெருக்கடியானது! 2011-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டவர் ரோசையா. மத்தியில் திமுக வலுவாக இருந்த காலகட்டம் அது! ஜெயலலிதாவுக்கு குடைச்சல் கொடுக்கவே, திமுக தூண்டுதலில் ஆந்திர காங்கிரஸ் காரரான ரோசையாவை நியமித்ததாக அப்போது பேச்சு இருந்தது.

அதற்கு ஏற்ப ஆரம்ப நாட்களில் ரோசையாவும் அரசு சார்ந்த விவகாரங்களில் ரொம்பவும் கறாராக இருந்தார்.இந்தச் சிக்கலுக்கு ‘டிரபுள் ஷூட்டரா’க தலைமைச் செயலக உயர் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டவர்தான் ரமேஷ் சந்த் மீனா. இவர் ஆளுனரின் செயலாளராக ராஜ் பவனுக்குள் நுழைந்தபிறகு, கொஞ்சம் கொஞ்சமாக ஆளுனர் மாளிகை அரசுக்கு இசைவான மாளிகையாக மாறியது.

ஜெயலலிதா விரும்பிய நேரங்களில் அமைச்சரவை மாற்றம், ஜெயலலிதா அரசு எழுதிக் கொடுக்கும் உரைகளை மாற்றமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுவது என அனைத்து அம்சங்களிலும் ஜெயலலிதாவே விரும்புகிற ஆளுனராக ரோசையா மாறிப் போனார். 2014-ல் மத்தியில் மோடி அரசு வந்தபிறகு அத்தனை மாநிலங்களிலும் ஆளுனர் மாற்றப்பட்டபோதும், ரோசையா மட்டும் மேலும் 2 ஆண்டுகள் நீடித்ததும் ஜெயலலிதாவின் பரிந்துரையால்தான்!

இதன்பிறகு 2016 செப்டம்பரில் வித்யாசாகர் ராவ் கவர்னராக நியமிக்கப்பட்டபோதும், ரமேஷ் சந்த் மீனாவை மாற்றவில்லை. அந்த காலகட்டத்திலும் கோட்டைக்கு இசைவானவராக வித்யாசாகர் ராவை செயல்பட வைத்ததில் ரமேஷ் சந்த் மீனாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்கிறார்கள். இப்படி ராஜ் பவனின் ராஜதந்திரியாக இருந்த அவரது மாற்றம், ஆட்சியாளர்களுக்கு நடுக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

புதிதாக ஆளுனரின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., தலைமைச் செயலாளரின் அந்தஸ்தில் பணியாற்றுவார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு மாநில அரசு சார்பில் யாரும் ஆணையிடும் வாய்ப்பே இல்லை. முழுக்க ஆளுனர் அல்லது மத்திய அரசுதான் இவரை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.

ரமேஷ் சந்த் மீனா, ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்! அவரால் சரளமாக தமிழில் பேசவோ, தமிழகத்தின் அரசியல் மற்றும் பூகோள அம்சங்களை அறிந்தோ இயங்குவது கடினம். ஆனால் ஆர்.ராஜகோபால், தமிழகத்தை சேர்ந்தவர். ஏற்கனவே தமிழகம் முழுவதும் பணியாற்றியவர். இங்குள்ள அரசியல் சூழல்களும் இவருக்கு தெரியும்.

தமிழகம் முழுக்க ஆய்வுகள், அதிகாரிகள் சந்திப்பு என கலக்க விரும்பும் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்-துக்கு ராஜகோபால் ஐ.ஏ.எஸ் முழு துணையாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட்டையில் ஒரு தலைமைச் செயலாளர் இருக்க, ‘சூப்பர் தலைமைச் செயலாளர்’ என சொல்லத்தக்க வகையில் ஆர்.ராஜகோபால் அதிகாரம் பெற்றாலும் ஆச்சர்யமில்லை.

 

Governor Banwarilal Purohit Raj Bhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment