உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பானது கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கடந்த மே-14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்பதால் கூடுதல் அவகாசத்தை மாநில தேர்தல் ஆணையம் கோரியது. இது தொடர்பான வழக்கு கடந்த 4-ம் தேதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், தேர்தல் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் குழப்பம் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தல் பதில் மனு செய்துள்ளது. 1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட வார்டு முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பதில் குழம்பம் உள்ளது என்றும், வார்டு வரையறை குறித்து உயர்நீதிமன்றத்தின் விளக்கம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.