தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தமிழக அரசு மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றம் செய்து வருகிற தேர்தலில் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919-ன் படி மாநகராட்சி மேயர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் அவர்களில் ஒரு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று இருந்தது. மேலும், அதில் ரோஸ்டர் முறையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர். முதல்வராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் போனது. அதன்பிறகு, திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அக்டோபர் மாதம் 1996ம் ஆண்டு தான் முதல்முறையாக நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள், 74வது அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தத்திற்கு பிறகு நடைபெற்றது. அப்போது திமுக நேரடியான தேர்தல் முறை வேண்டும் என்றும் மக்கள் யாரை மேயராக தேர்வு செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறிவிக்க அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியது. இதையடுத்து, மக்கள் நேரடியாக மேயரை தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டு 23 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்று சென்னை மாநகராட்சிக்கு மேயர் கிடைத்தார். மு.க.ஸ்டாலின் மேயரானார்.
அதிமுக அரசு 2006 ஆம் ஆண்டு மேயருக்கான நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து அறிவித்தது. அதன் பிறகு, மீண்டும் 2011 ஆம் ஆண்டு நேரடி தேர்தல் முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
2016-ம் ஆண்டு மேயர் பதவி, கவுன்சிலர்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படும் என்ற சட்ட திருத்த மசோதாவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டத்திருத்த மசோதாவை 2018-ம் ஆண்டு ஜனவரியில் பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இப்படி தமிழக உள்ளாட்சி தேர்தலில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் தமிழக அரசு மாற்றி மாற்றி திருத்தங்களை கொண்டுவந்தது வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், நேற்று அவசரமாகக் கூடிய அதிமுக அரசின் அமைச்சரவைக்கூட்டம், தமிழகத்தில் மேயர் பதவிக்கான சட்டத்தை திருத்தி மாநகராட்சி மேயர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவசரச் சட்டம் இயற்றி கெசட்டில் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் நாகராட்சி மேயர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் அவர்களில் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதியாகியுள்ளது. அதே போல, நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியும் தேர்ந்தெடுக்கப்படும்.
தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் குறித்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் என்ற அரசாணை வெளியிட்டதற்கு புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேரடி தேர்தல் இல்லாமல் மறைமுகத் தேர்தலாக நடத்தலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அப்படி எதுவும் பேசவில்லை என்று கூறினார். ஆனால், இன்று மாலையில் அதற்கான உத்தரவு போடப்பட்டுள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது. அப்பதிமுகவைப் பொறுத்தவரையில், இதை ஒரு சர்வாதிகாரத்தோடு, ஜனநாயம் பாதுகாக்கமுடியாத சூழ்நிலையில் அதிமுக இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதை சொன்னால், திமுக ஆட்சியில் நடத்தப்படவில்லையா என்று ஒரு கேள்வி கேட்பார்கள். நாங்கள் நடத்தினோம். உண்மைதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலை. அதுமட்டுமில்லை, அதனால், உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி இருந்துகொண்டிருந்தது. அதனால், மீண்டும் அதை மாற்றி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிற வகையில் மாற்றப்பட்டது. மாநாகராட்சித் மேயராக இருந்தாலும், நகராட்சி தலைவராக இருந்தாலும், பேரூராட்சி தலைவராக இருந்தாலும் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையில் இருந்தால்தான் சரியாக இருக்கும்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், “அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைமுகத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் கூறுகையில், “பஞ்சாயத்து ராஜ்யம் மூலம் கடைகோடி மக்களுக்கும் ஜனநாயகத்தின் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் மறைமுகத் தேர்தல் மூலம் நிறைவேறாது. இன்று காலை துணை முதல்வர் ஊடகங்களிடம் பேசும்போது மறைமுகத் தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை. அது போல முடிவு செய்ததாக தெரியவில்லை என்று கூறினார். ஆனால், இப்போது உத்தரவு வந்திருக்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.
திமுக இதே போல, தங்களுக்கு சாதகமான சூழல் இல்லை அசௌகரியமாக இருக்கிறது என்று நினைக்கிற போதெல்லாம், அவர்களும் இதைத்தான் செய்திருக்கிறார்கள். எனவே மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். ஜனநாயகத்தின் முழு சுதந்திரத்தையும் கொண்டுசெல்லாது. என்பதால் இந்த சட்டத்திருத்ததை வரவேற்கின்ற மனப்பான்மையில் ஜனநாயகத்தை விரும்புவர்கள் இருக்கமாட்டார்கள்.” என்று கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர், எழுத்தாளர் கௌதம சன்னா தமிழக அரசின் அவசர சட்டத் திருத்தம் பற்றி கூறுகையில், “தமிழக அரசு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை பழையபடி கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கும் முறையை அவசர சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவந்துள்ளது. மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டுவந்த தமிழக
தலைவர், பழையபடி மேயர் பதவிக்கு ரோஸ்டர் முறையையும் கொண்டுவர வேண்டும். ரோஸ்டர் முறை கொண்டுவரப்பட்டால், சிறுப்பான்மையினர், பெண்கள், தலித்துகள் என அனைத்து தரப்பினரும் மேயர் பதவியை அடைய முடியும். இதனால், அவர்களுக்கு இந்த ஜனநாயக அமைப்பு முறையில், நம்பிக்கை வரும். அதனால், அனைத்து மாநகராட்சி மேயர் பதவிக்கும் ரோஸ்டர் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அவசர சட்டம் தெளிவில்லாமல் உள்ளது. கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி மேயர் 5 ஆண்டுகளுக்கு மேயராகவே இருப்பார் என்று கூறுகிறது. அவருக்கு எதிராக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
ஒருவேளை ஏதேனும் காரணங்களால் மேயர் பதவி காலியானால், பிரஷ் எலக்ஷன் வைத்து மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறுகிறது. அது மட்டுமில்லாமல், மேயர் தகுதிநிக்கம் அடைந்தால் என்று குறிப்பிடும்போது அதற்கான காரணங்கள் பற்றியும் தெளிவில்லாமல் உள்ளது. அதனால், இது ஒரு தெளிவற்ற சட்டத் திருத்தமாக உள்ளது” என்று கூறினார்.
தமிழக அரசு மறைமுகத் தேர்தல் முறையைக் கொண்டுவந்திருப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஊடகங்களிடம் கூறுகையில், “ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் எனில் நேரடித் தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும். அதிமுக அரசு தங்களை தற்காத்துக்கொள்ளவே மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளார்கள்.” என்று கூறினார்.
தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “மேயரை மறைமுகமாக தேர்வு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை அதிமுக அரசு மீறுவது அவமதிக்கும் செயலாகும். கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி மேயர் பதவிகளை கைப்பற்றலாம் என்ற முயற்சியை முறியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் ஏற்கெனவே பலமுறை மறைமுகத் தேர்ந்தல் நடந்திருக்கிறது என்ற அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் 2011-இல் நேரடி தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு நேரடித் தேர்தல் நடைபெற்றது. கடந்த சட்டமன்ற கூட்டத்தில் கூட நேரடித் தேர்தலுக்கான நடத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கிறபோது, திடீரென அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, திடீரென நேரடித் தேர்தலை மறைமுகத் தேர்தலாக மாற்றுகிறார்கள் என்றால் இதை மக்களின் ஜனநாயக உரிமையை தட்டிப்பறிக்கிற காரியம் என்றுதான் கூறுவேன். அவர்களின் உண்மையான நோக்கம், நேரடியாக மக்கள் வாக்களித்தால் அதிமுக - பாஜக கூட்டனி வெற்றிபெற முடியாது. கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குதிரைப் பேரத்துக்கும் முறைகேடுக்கும் வாய்ப்பளிக்கப்படும். கவுன்சிலர்கள் ஓட்டு போட்டாலும் அதிகாரிகளைவைத்து வெற்றிபெற்றவர்களை மாற்றி அறிவிப்பதற்கான முறைகேடுகளுக்கு வாய்ப்பு அளிக்கும். முறைகேடுகளின் மூலம் உள்ளாட்சி நிர்வாகத்தை கைப்பற்ற அதிமுக சதித்திட்டம் தீட்டியிருப்பது நடந்திருக்கிறது. இதற்கு வண்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.