தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வர வாய்ப்புள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவடைந்து அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என இரு அணிகளாக உருவானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என இரு அணிகளும் மீண்டும் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, இரு அணிகளும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதோடு, பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்றிருந்தார். இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பிருப்பதாக பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை என்பதே தேமுதிக-வின் நிலைப்பாடு என்று கூறினார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.