வி.கே.சசிகலா மீதான பாசத்தில் அமைச்சர்கள் சிலரே திளைக்கிறார்கள். இவர்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளிப்படையாக சசிகலாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
வி.கே.சசிகலா பரோலில் வெளிவந்திருக்கும் சூழலில், அவரை அரசியல் ரீதியாக யாரும் சந்திக்க முடியாது. கர்நாடக சிறைத்துறை இதனை கண்டிப்பான நிபந்தனையாக விதித்துள்ளது. தமிழக அரசு அனுப்பிய ‘ரிப்போர்ட்’தான் இந்த நிபந்தனைக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த நிபந்தனை மட்டும் இல்லாவிட்டால், அதிமுக அமைச்சர்களில் பாதிபேர் சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் சசிகலா தங்கியிருக்கும் இல்லத்தின் வாசலில் வரிசை கட்டியிருப்பார்களா? என்கிற விவாதம் அதிமுக முகாமிலேயே நடந்து கொண்டிருக்கிறது. காரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் ஆரம்பித்து அவரது அமைச்சரவை சகாக்கள் பலருக்கும் டிடிவி தினகரனை விமர்சிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் சசிகலா பெயரைக் கேட்டால் இப்போதும் பம்முகிறார்கள். ஜெயகுமார், கே.சி.வீரமணி என வெகு சிலர் இதில் விதிவிலக்கு!
கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலாவை சந்திக்க இருப்பதாகவே செய்திகள் வந்தன. ஆனால் அதற்கு மறுப்பு சொன்னவர் ஓ.எஸ்.மணியன் இல்லை, ஜெயகுமார்தான்! அதேபோல டிடிவி தினகரனுக்கு எதிராக அவ்வப்போது சரவெடியாக வெடிக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம், சசிகலாவின் பரோல் விடுதலை பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, கையெடுத்து கும்பிட்டு ஒதுங்கினார்.
சசிகலா பரோலில் சென்னைக்கு வந்த வேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக வெளியூர் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டதுகூட எதேச்சையானதா? அல்லது, ஏதோ உள்பயத்தில் நடக்கும் ஒதுங்கலா? என விவாதம் நடக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சரியாக இந்தத் தருணத்தில் டெல்லி, ஊட்டி என தனது பயணத்தை அமைத்துக்கொண்டது அந்த விவாதத்தை அதிகமாக்குகிறது.
இந்தச் சூழலில்தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் பேசுகையில் வெளிப்படையாக சசிகலாவை புகழ்ந்தார். அவர் கூறுகையில், ‘அம்மா ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் சின்னம்மாதான். அதை நான் ஒருபோதும் மாற்றிப் பேசமாட்டேன். ஆனால் அமைச்சராக இருப்பதால் விருப்பு வெறுப்புடன் பேச முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு எனது பேச்சு இடையூறாகி விடக்கூடாது. இதில் திமுக பயன் பெற்றுவிடக்கூடாது’ என்றார் செல்லூர் ராஜூ.
அதிமுக அமைச்சர்களின் பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளை பார்த்தால், சசிகலா எப்போது வெளியே வந்தாலும் நிர்வாகிகளில் ஒரு கூட்டம் அவரை பின் தொடர தயாராக இருப்பதாகவே தெரிகிறது. இதற்கிடையே சசிகலா தி.நகரில் இளவரசியின் மகள் இல்லத்தில் தங்கியிருந்தபோது விசுவாச அமைச்சர்கள் சிலர் அவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறுகிறார்கள். டிடிவி தினகரனின் அவசரகதியான செயல்பாடுகளால்தான் தாங்கள் மாற்று முடிவு எடுக்க நேர்ந்ததாக அவர்கள் விளக்கம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதை இரு தரப்புமே உறுதிப்படுத்தவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.