scorecardresearch

கமல்ஹாசனுக்கு நெருக்கடி : வரிசையாக பாயும் தமிழக அமைச்சர்கள்

நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது. அடுத்தடுத்து தமிழக அமைச்சர்கள் அவர் மீது பாய்வதால் அரசுக்கும் திரையுலகுக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனுக்கு நெருக்கடி : வரிசையாக பாயும் தமிழக அமைச்சர்கள்

பொதுவாக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறவர்களை அனுசரித்து போவதுதான் தமிழ் சினிமாத் துறையின் இயல்பு. காரணம், கேளிக்கை வரிவிலக்கு உள்ளிட்ட அம்சங்களில் அரசின் தயவு சினிமாக்காரர்களுக்கு தேவை. தவிர, தியேட்டர்களில் கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் விற்பனை, மலைக்க வைக்கும் பார்க்கிங் கட்டணம், சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை என அரசு நடவடிக்கை எடுக்கக் கிளம்பினால் தியேட்டர்களின் பாடு திண்டாட்டம்தான்!

ஆனால் ஒரு பலவீனமான அரசு செயல்படும் சூழலை புரிந்துகொண்டு நடிகர் கமல்ஹாசன் பகிரங்கமாக அரசை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் பிக்பாஸ் சர்ச்சைகள் தொடர்பான பிரஸ்மீட்டிலும், ‘இது அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்த அரசு’ என சாடினார். பல கோடி ரூபாய் பிசினஸில் புரளும் தனது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு விளம்பரம் சேர்க்கும் நோக்கில் அவர் இந்த தருணத்தில் அரசை சீண்டுவதாகவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

இந்தச் சூழலில் கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் வரிசையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘கமல் ஒழுங்காக வரி கட்டுகிறாரா? என்பதை முதலில் விளக்கட்டும். தொடர்ந்து அரசு மீது அவதூறு இறைத்தால் அவர் மீது வழக்கு தொடரவேண்டியிருக்கும்’ என எச்சரித்தார்.

நிதி அமைச்சர் ஜெயகுமார் ஜூலை 15-ம் தேதி நிருபர்களிடம் பேசுகையில், ‘தனது பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவே கமல் இந்த அணுகுமுறையை கையாள்கிறார். இதுபோல அரசு மீது சேற்றை வாரி இறைத்து அவர் எங்களை வம்புக்கு இழுக்கக்கூடாது. தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்கிறார் அவர். இந்திய அரசியலமைப்பு சட்டப்படிதான் இங்கு ஆட்சி நடக்கிறது. அப்படியானால் அரசியலமைப்புச் சட்டத்தை சரியில்லை என்கிறாரா? தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக இருப்பதாக சொல்லும் அவர் அதை நிரூபிக்க தயாரா? என சவால் விடுகிறேன்.’ என ஆவேசம் காட்டினார் ஜெயகுமார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகள் சம்பந்தமாக கமலிடம் ஆதாரங்கள் இருந்தால், தாராளமாக அவர் நீதிமன்றம் போகலாம். இல்லாவிட்டால், அரசியலுக்கு வந்து அவர் விமர்சனங்களை வைக்கட்டும். மக்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த அரசு அஞ்சாது.’ என்றார் அவர்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொறுப்பு கமல்ஹாசன்தான். அதில் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருக்கின்றன. இதற்காகவே கமலை கைது செய்யவேண்டும்’ என்றார் காட்டமாக.

ஜூலை 15-ம் தேதி நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அளித்த ஒரு பேட்டியில், ‘கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், மொத்த திரையுலகமும் அவர் பின்னால் நிற்கும்’ என்றார். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமா? என்கிற கேள்வி எழுந்து நிற்கிறது. காரணம், நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, சினிமாத்துறையில் அரசு சட்டவிதிகளை முழுமையாக அமல்படுத்தினால் ‘பாம்பு’கூட படம் எடுக்க முடியாது.

தவிர, கேளிக்கை வரி விலக்கு சம்பந்தமாக அரசு குழுவுக்கும், திரையுலக குழுவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் கனிந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாத சினிமா விருதுகளையும் அண்மையில் தமிழக அரசு அறிவித்து சினிமாத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நினைத்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்று சந்திக்க முடிவதையும் சினிமாத் துறையினர் வரப்பிரசாதமாக நினைக்கிறார்கள்.

இந்தச் சூழலில் கமல் இப்படி மோதுவதை சினிமாத் துறையிலேயே பலர் விரும்பவில்லை. தனது பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த மட்டுமல்லாது, ‘விஸ்வரூபம்’ படத்தின்போது அ.தி.மு.க. அரசு போராட்டக்காரர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டதற்கு பழிவாங்கும் விதத்திலும் கமலின் செயல்பாடு இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. சினிமா போல இந்த மோதலும் சுவாரசியங்களுடன் நகரலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu ministers against kamalhasan big pressure for the actor

Best of Express