தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக கூட்டுகிறார். எக்குத்தப்பாக பேசி சிக்கலில் ஆழ்த்தும் அமைச்சர்களுக்கு இதில் வாய்ப்பூட்டு போடவிருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அலை கடலில் சிக்கிய துரும்பாக ஆட்டம் கண்ட அதிமுக ஆட்சியை, ‘தம்’கட்டி நிலை நிறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆரம்பத்தில் இவரை எட்டிக்காயாக பார்த்த டெல்லியை, இவரை நோக்கி திருப்பியது அவரது முதல் சாதனை. அதன்பிறகே ஓபிஎஸ் வேறு வழியில்லாமல் வந்து ஒட்டினார்.
ஆனால் அதன்பிறகு சசிகலா குடும்பத்தை எதிர்க்கவேண்டிய சூழல் உருவானதால், டிடிவி தினகரனின் கோபத்தை சமாளித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வெவ்வேறு வழக்குகளைப் போட்டு ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரும் வழக்கு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் வழக்கு, ஓ.பிஎஸ் உள்ளிட்ட அவரது அணியின் 12 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கக் கோரி வழக்கு ஆகியன திமுக.வின் முக்கியமான சட்டப் போராட்டங்கள்!
இப்படி டெல்லி சூழல் , டிடிவி எதிர்ப்பு, ஸ்டாலின் தாளிப்பு என பலவற்றை சமாளித்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு இடைவிடாத தலைவலி, அவரது அமைச்சரவை சகாக்களின் வாய்நீளம்தான்! மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் சீனியர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆரம்பித்து வைத்த குழப்பம் இது!
அந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘அப்பல்லோவில் அம்மா அட்மிட் ஆகியிருந்தபோது இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என பொய் சொல்லிவிட்டோம் மக்களே, எங்களை மன்னித்து விடுங்கள்!’ என தலைக்கு மேல் கைகுவித்து வணங்கினார் அமைச்சர்! அதோடு, ‘அம்மாவை யாரும் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை’ என்றும் போட்டு உடைத்தார் திண்டுக்கல்லார்.
ஏதோ எதார்த்தமாக மனம் திறந்து பேசியதாக அமைச்சர் நினைத்துக் கொண்டிருக்க, அது அரசியல் ரீதியாக புயலைக் கிளப்பியது. ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசனை கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் உக்கிரம் காட்டின. இந்தச் சர்ச்சை காரணமாகவே அதுவரை விசாரணை ஆணைய நீதிபதி பெயரை அறிவிக்காமல் போக்கு காட்டிய அரசுக்கு, உடனே நீதிபதியை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன்பிறகு, ‘நொய்யல் ஆற்றில் வரும் நுரைகளுக்கு கரையோர மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்’ என ஒரு அமைச்சர் கிச்சுகிச்சு மூட்டினார். டெல்லியில் பேட்டியளித்த மூத்த தலைவரான தம்பிதுரை, ‘சசிகலாவும், தினகரனும் எங்களுடன் வந்து சேர்ந்து இணைந்து செயல்படுவார்கள்’ என அறிவித்து, அவர் சார்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியூட்டினார்.
கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரான தம்பிதுரையின் இந்தப் பேட்டியை, ‘அவரது சொந்தக் கருத்து’ என கட்சியில் பதவி எதிலும் இல்லாத (மீனவரணி செயலாளர் பதவி, சசிகலாவால் வழங்கப்பட்டது என்பதால் இப்போது இல்லை) அமைச்சர் ஜெயகுமார் மறுத்தார். இதேபோல அமைச்சர் ஓ.எஸ்.மணியன் டிவி பேட்டிகளில் சசிகலா மீது சாஃப்ட் கார்னராக பேசி வருவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.
இந்தச் சூழலில்தான் ஏற்கனவே தெர்மாகூல் மூலமாக பரபரப்பான கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ‘சசிகலாதான் இந்த ஆட்சியை அமைத்தார். அதை யாரும் மறுக்க முடியாது. நானும் அதை மாற்றிப் பேசமாட்டேன். அமைச்சரவையில் இருப்பதால், எனது விருப்பு வெறுப்பு அடிப்படையில் பேச முடியவில்லை’ என குறிப்பிட்டார்.
அதோடு, ‘இன்னும் நிறைய மாற்றங்கள் வரும்’ என்கிற ரீதியிலும் செல்லூர் ராஜூ பேசினார். ஆக, அமைச்சராக இல்லாவிட்டால், சசிகலாவுக்கு ஆதரவாக நிற்பேன் என கூறுவதுபோல செல்லூர் ராஜூவின் பேட்டி அமைந்துவிட்டது. இந்தப் பேட்டி, ஒபிஎஸ் வட்டாரத்தில் கடும் குமுறலை கிளப்பியது. அதோடு, செல்லூர் ராஜூவை தங்களின் ஸ்லீப்பர் செல்லாக குறிப்பிட்டு டிடிவி அணியின் சி.ஆர்.சரஸ்வதி பேசியது எரிகிற நெருப்புக்கு நெய் வார்ப்பதாக அமைந்தது.
செல்லூர் ராஜூவுக்கும் வழக்கம்போல அமைச்சர் ஜெயகுமாரே மறுப்பு தெரிவித்திருக்கிறார். இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயகுமார், ‘தனது உடல் நிலையையும் பாராமல் பிரசாரம் செய்த ஜெயலலிதாதான் இந்த ஆட்சிக்கு காரணம்’ என்றார் ஜெயகுமார்.
இப்படி திமுக.வை விட அதிகமாக அமைச்சர்கள் சிலரது பேட்டிகளே டார்ச்சராகி விடுவதால், அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போட முடிவு செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையொட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 11-ம் தேதி) கோட்டையில் அவசரமாக அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் சிபாரிசு குறித்து முடிவெடுப்பதுதான் இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தின் அலுவல் சார்ந்த அஜண்டா! ஆனால் அதைத்தாண்டி, இன்றைய சூழலில் ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கும் விதமாக அமைச்சர்கள் பேசி வருவதை முதல்வர் எடப்பாடி சுட்டிக்காட்டவிருப்பதாக கோட்டை வட்டாரங்களில் குறிப்பிடுகிறார்கள்.
‘ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் துறை சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள். அல்லது, உங்கள் ஏரியாவில் திமுக.வின் அரசியலுக்கு பதில் கொடுங்கள். சசிகலா-டிடிவி விவகாரத்திற்கு பதில் சொல்லும் பொறுப்பை அமைச்சர் ஜெயகுமாரே கவனிக்கட்டும். தேவைப்பட்டால் கட்சியின் ஒருங்கிணைப்பு பதவியில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பதில் தெரிவிப்பார்கள்’ என இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெளிவு படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்களின் பேச்சில், உரிய மாற்றம் இருக்கும் என அடித்துச் சொல்கிறது கோட்டை வட்டாரம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.