தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

முதல்வரின் இந்த அறிக்கையையடுத்து, திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும், மேஜையை தட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்சபை கூட்டத் தொடர் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றபின், முக்கிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டனர். இந்நிலையில், இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.

சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் 8 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. தமிழக மின்தூக்கிகள் சட்டம், ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம், உடல் ஊனமுற்றோரின் உரிமைகள் சட்டம், மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான திருத்தச் சட்டம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இவை அனைத்தும் இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஒரே நாளில் 25 மசோதாக்களை நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சட்டமன்றம் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ஐம்பத்தைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு கோடியிலிருந்து இரண்டரை கோடியாகவும், எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கையையடுத்து, திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும், மேஜையை தட்டி ஒருமித்த ஆதரவைத் தெரிவித்தனர்.

சுமார் பத்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக திமுக ஆட்சிக் காலத்தில் தான் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close