Advertisment

புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி பதவியேற்பு

தமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வருகிற 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu new governor banwarilal purohit, governor banwarilal prohit taking oath on october 6, tamilnadu governor

தமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வருகிற 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Advertisment

தமிழக கவர்னராக இருந்த ரோசையா ஓய்வுக்கு பிறகு, தமிழகத்திற்கு நிரந்தரமான புதிய கவர்வர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா ஆளுனரான வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். கடந்த ஓராண்டாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் முன்பு எப்போதையும்விட அரசியல் குழப்பங்கள் அதிகமான இந்தச் சூழலில், நிரந்தர கவர்னரின் தேவையும் அதிகமாக இருந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள் மும்பை சென்று வித்யாசாகர் ராவை சந்தித்து திரும்பிய நிகழ்வுகளும் நடந்தன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், ‘பாஜக.வில் கவர்னர் பதவிக்கு தகுதியான ஆட்கள் இல்லையென்றால், நாங்கள் தருகிறோம்’ என கமெண்ட் அடித்தார்.

இந்தச் சூழலில் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் 29-ம் தேதி புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். அதுவும், வேறு 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர் நியமன அறிவிப்புடன்தான் தமிழகத்திற்கும் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவைச் சேர்ந்தவர். 1977-ம் ஆண்டு அவர் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். முதன்முதலில் 1978-ல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். பின்னர் 1980-ல் நாக்பூர் தெற்கு தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-ல் முதன்முதலாக அமைச்சரானார்.

1984, 1989 ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 1996-ல் மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். அப்போது உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

கோபால கிருஷ்ன கோகலே உருவாக்கிய தி ஹிதாவதா ஆங்கில நாளிதழை மீண்டும் உயிரிப்பிப்பதில் பெரும் பங்காற்றினார். நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் செயல்படத் தொடங்கிய அந்தப் பத்திரிகை சில காலம் மத்திய இந்தியாவில் சிறந்து விளங்கியது. இவர், 2015-ல் அசாம் மாநில கவர்னராகவும், 2016-ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் இருந்தார். தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுனரின் பதவியேற்பு நிகழ்ச்சி வருகிற 6-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி சென்னைக்கு வருகை தரும் பன்வாரிலால் புரோகித்தை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க இருக்கிறார்கள்.

பின்னர் கவர்னர் மாளிகையான கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

Governor Banwarilal Purohit Justice Indira Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment