புதிய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர். ஓ.பி.எஸ். - துணை முதல்வர், மாஃபாய்க்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 21 அன்று அதிமுக அணிகள் இணைப்பு நடந்த சிறிது நேரத்தில் புதிய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு நிதி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
மாஃபாய் பாண்டியராஜன்
ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த மாபாய் பாண்டியராஜனுக்கு, கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம் இருந்த கனிம வளத்துறை, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித்துறை ஓ.பி.எஸ்.ஸுக்கு போனதால், உடுமலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. கால் நடைத்துறையை வைத்திருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, செங்கோட்டையனிடம் கூடுதலாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாலை 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் கவர்னர் மாளிகையில் பதவியேற்கிறார்கள்.
கவர்னர் மாளிகை அறிவிப்பு
ஓ.பி.எஸ். அணியில் செம்மலைக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன், மனோரஞ்சிதம் உள்ளிட்ட ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் வேறு சிலரும் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. எனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற மாஃபாய்க்கு மட்டும் இடம் கொடுத்து முடித்துக் கொண்டனர்.
மாலையில் நடக்கும் பதவியேற்பில் ஓ.பி.எஸ்.ஸும், மாஃபாயும் பதவியேற்பார்கள்.